கூட்டணி முறிந்தது; ஆட்சி கவிழ்ந்தது!

காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றுள்ளது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை மெகபூபா முஃப்தி ராஜிநாமா செய்துள்ளார்.

காஷ்மீரில் 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸுக்கு 12 இடங்களும் கிடைத்தன. 87 தொகுதிகளைக் கொண்ட காஷ்மீரில் ஆட்சியமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில். மஜக மற்றும் பாஜக கூட்டணி அமைத்தன. அதன்படி, 2015ஆம் ஆண்டும் மார்ச் 1ஆம் தேதி முஃப்தி முகமது சயீத் முதல்வராகப் பதவியேற்றார். கடந்த 2016ஆம் ஆண்டு அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முஃப்தி முதல்வராகப் பதவியேற்றார்.
பாஜக மற்றும் மஜக கூட்டணி ஆட்சி காஷ்மீரில் நடைபெற்று வந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல்களும் கருத்து மோதல்களும் இருந்துவந்தன. குறிப்பாக கத்வா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தங்களின் பதவியையும் ராஜிநாமா செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.
கூட்டணி முறிந்தது
அதேபோல், ரம்ஜான் நோன்பு காலத்தை முன்னிட்டு காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. தற்போது ரம்ஜான் முடிந்துவிட்ட நிலையில் சண்டை நிறுத்தம் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆளும் மஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ரைசிங் காஷ்மீர்’ ஆசிரியர் ஷுஜாத் புகாரி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது நிலையை மேலும் கடினமாக்கியது.
இந்நிலையில், ஆளும் மஜகவுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்ப பெறுவதாக பாஜக இன்று (ஜூன் 19) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் ராம் மாதவ், காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவும் வளர்ச்சியை ஏற்படுத்தவுமே மஜகவுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், நாளுக்கு நாள் தீவிரவாதச் செயல்கள் அதிகரித்துவருகின்றன. பத்திரிக்கையாளர் ஷுஜாத் புகாரி கொல்லப்பட்டுள்ளது பத்திரிகைச் சுதந்திரம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது. சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறித் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே அவர்களுக்கு எதிரான நடவடிக்கையைப் பாதுகாப்பு படை தீவிரப்படுத்த வேண்டும்.
இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது. காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாநில அரசு மறுத்துவருகிறது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால்தான் மக்கள் ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். இதே நிலை நீடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றுவோம். இங்குக் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினாலும் தீவிரவாதத்தை எதிர்த்து பாஜக போராடும்” என்று தெரிவித்துள்ளார்.
பதவி விலகிய மெகபூபா
பாஜகவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக மஜகவின் செய்தி தொடர்பாளர் ரஃபி அஹ்மத் மீர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “தனது தவறை பாஜக உணர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காஷ்மீரில் தீவிரவாதத்தைக் குறைத்தோம். ஆனால், பாஜக அரசு அமைந்த பின்பு காஷ்மீர் அழிவின் பாதையில் செல்லத் தொடங்கியது” என்று குற்றம் சாட்டினார். மேலும், மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதற்கிடையே, முதல்வர் மெகபூபா முஃப்தி பதவி விலகினார். ஆளுநர் என்.என்.வோராவைச் சந்தித்துத் தனது ராஜிநாமா கடிதத்தை அவர் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தேன். மேலும், எந்தக் கூட்டணிக்கும் முயற்சிக்கவில்லை எனவும் அவரிடம் தெரிவித்தேன். காஷ்மீர் மீதான பாதுகாப்புக் கொள்கை மாற்றப்பட வேண்டும்.
பாஜக கூட்டணியை முறித்ததிலும், முதல்வர் பதவி பறிபோனதிலும் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், அதிகாரத்திற்காக இந்த கூட்டணி அமைக்கவில்லை. மிகப்பெரிய கனவைச் செயல்படுத்தவே இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது. இருதரப்பு போர் நிறுத்தம், மோடியின் பாகிஸ்தான் பயணம், 11 ஆயிரம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் ஆகியவை இந்த ஆட்சிக் காலத்தில் நடந்துள்ளன” என்று தெரிவித்தார்.
மெகபூபாவின் ராஜிநாமாவை அடுத்து முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை ஆளுநர் வோரா சந்தித்துப் பேசியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உமர் அப்துல்லா, “ஆட்சி அமைக்க எந்தக் கட்சியிடமும் நாங்கள் ஆதரவு பெறவில்லை. எந்தக் கட்சியும் ஆதரவு கேட்டு எங்களை அணுகவில்லை. வேறு எந்த விதமாகவும் ஆட்சி அமைக்க நாங்கள் உரிமை கோர மாட்டோம். மேலும் ஆளுநர் ஆட்சியை நீண்ட காலம் நடைமுறைப்படுத்தக் கூடாது விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தேன்” என்று தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், உள்துறைச் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகியோரும் டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.