அமித் ஷாவின் அடுத்த உத்தி!

நான்கு ஆண்டுகால மோடி ஆட்சியின் நிறைவை ஒட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவதோடு ஓய்ந்துவிடவில்லை பாஜக அகில இந்திய தலைவரான அமித் ஷா. அதையும் தாண்டிய ஓர் திட்டத்தை தயாரித்து அதை செயல்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தன்னில் இருந்து ஆரம்பித்து கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த அரசியல் சாராத வி.ஐ.பி.களை சந்திக்க வேண்டும், மோடி ஆட்சியின் நான்கு ஆண்டுக் கால நிறைவு சாதனை மலரை அவர்களிடம் கொடுக்க வேண்டும், அவர்களை பாஜக ஆதரவாளர்களாக, புரவலர்களாக மாற்ற வேண்டும் என்பதே அமித் ஷாவின் உத்தரவு. இந்த உத்தரவை தனக்குத் தானே இட்டுக் கொண்டு தானே அதன்படி நடந்துகொள்ளவும் தொடங்கிவிட்டார் அமித் ஷா.
மோடி ஆட்சியின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் புத்தகம், டிஜிட்டல் வடிவில் பென் டிரைவ் என இரு வடிவங்களில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தையும் பென் டிரைவையும், தங்களுக்குத் தெரிந்த, அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள விஐபிகளிடம் கொடுத்து அவர்களுக்கு பாஜக அரசின் சாதனைகளைத் தெரியப்படுத்த வேண்டும். ஆட்சி பற்றி அவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும், தவறான கருத்துகள் இருந்தால் அதற்கு உரிய விளக்கங்களைச் சொல்லி அவர்களுக்கு பாஜக ஆட்சி பற்றி புரிய வைக்க வேண்டும்.
’சம்பர்க் ஃபார் சமர்த்தன்’ அதாவது ஆதரவுக்கான சந்திப்புகள் என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சந்திப்புகளை பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித் ஷாவே ஆரம்பித்து வைத்துவிட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், நடிகை மாதுரி தீட்சித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா, யோகா ராம் தேவ், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி டால்பிர் சிங், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லோதி, முன்னாள் மக்களவை செயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோர் அமித் ஷாவின் சந்திப்புப் பட்டியலில் இருக்கும் சிலர். இவர்கள் அனைவரிடமும் நான்கு ஆண்டு கால பாஜக அரசின் புத்தகமும் பென் டிரைவும் அமித் ஷாவால் வழங்கப்பட்டிருக்கின்றன. இதேபோல இன்னும் 50 பேரைச் சந்திக்கும் பயணத்தைக் கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கியிருக்கிறார் அவர்.
அமித் ஷாவின் அலுவலகம்தான் இந்த ஐம்பது பேர் பட்டியலைத் தயார் செய்திருக்கிறது. சம்பந்தப்பட்ட விஐபிகளின் வீட்டுக்கு அமித் ஷா செல்வதற்கு முன்பு அமித் ஷா சார்பில் அவரது பிரதிநிதிகள் சென்று அப்பாயிண்ட் மெண்டை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பின் அவர்களுக்கு வசதியான நேரத்தில் அமித் ஷா சென்று, அவர்களை சந்திக்கிறார். குறைந்தபட்சம் அரைமணி நேரத்துக்கு இந்த சந்திப்பு திட்டமிடப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பாஜக அரசின் சாதனைகள், பாஜகவின் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றைக் குறித்து விளக்குகிறார் அமித் ஷா.
இந்த வகையில்தான் ஜூன் 7 ஆம் தேதி நடிகை மாதுரி தீட்சித்தை சந்தித்த அமித் ஷா அவரிடம் சாதனை மலரையும், பென் டிரைவையும் அளித்தார். பாடகி லதா மங்கேஷ்கரையும் அன்றே அமித் ஷா சந்திப்பதாக இருந்தது. ஆனால் அவரது உடல் நலக் குறைவால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
கட்சியின் தலைவர் 50 பேர் என்றால், ஒவ்வொரு மாநிலத் தலைவர்களும் , முக்கிய நிர்வாகிகளும் தத்தமது வட்டாரத்தில் 50 பேரையாவது சந்திக்க வேண்டும், பாஜக சாதனைகளைத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பாஜக அரசுக்கான நற்பெயரைத் திரட்டுவதே நோக்கம்.
மகராஷ்டிர பாஜகவின் ஊடகப் பேச்சாளரான மாதவ் பண்டாரி கூறும்போது, “இந்த ஆளுமைகள் யாரும் நேரடி அரசியலோடு தொடர்புடையவர்கள் அல்லர். ஆனால் இவர்கள் பொது சமூகத்தில் தங்கள் செல்வாக்கை செலுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கருத்துருவாக்கத்தின் கர்த்தாக்கள். நாளையே மாதுரி தீட்சித் நாங்கள் கொடுத்த சாதனை மலரைப் படித்துவிட்டு மோடி அரசைப் பாராட்டிவிட்டு கருத்து தெரிவித்தால், அது எங்களுக்கு கூடுதல் பலனைக் கொடுக்கும். மேலும் இந்த ஆளுமைகளை பாஜகவோடு தொடர்ந்து தொடர்பில் வைத்திருப்பதற்கும் இந்த சந்திப்புகள் உதவும்’’ என்கிற மாதவ் பண்டாரி,‘’ஒவ்வொரு பாஜக நிர்வாகிக்கும் இந்த சந்திப்புகள் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனக்கும் கூட இலக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. என் அளவில் அவர்களை சந்திக்க இருக்கிறேன்’’ என்றார்.
தமிழகத்தில் இந்த திட்டத்தின்படி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (ஜூன் 7) கிண்டியிலுள்ள Apex Laboratories Pvt Ltd இயக்குநர் வணங்காமுடியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய பாஜக அரசின் 4ஆண்டு சாதனை குறித்து விளக்கி, அவரது கருத்துக்களையும் கேட்டறிந்தார். இதையடுத்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறனையும் சந்திக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.
அந்த வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் இன்று (ஜூன் 9) நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து புத்தகத்தையும் பென் டிரைவையும் வழங்கினார்.
சரிந்து வரும் பாஜகவின் செல்வாக்கை நிலைநிறுத்த அமித் ஷாவின் இந்த உத்தி பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Powered by Blogger.