தொடரும் ஆம் ஆத்மி போராட்டம்!

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி அமைச்சர்கள் காத்திருப்புப் போராட்டத்தை இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தனர். அதே நேரத்தில், கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக ஆம் ஆத்மி கட்சியினர் குவிந்தனர்.


ரேஷன் பொருட்களை மக்களின் வீடுகளுக்குச் சென்று அளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு பணிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டத்தினால் முடங்கியதாகக் கூறினார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். எந்தவித கோரிக்கைகளும் எழுப்பப்படாத நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற கடிதத்துடன், அவர் நேற்று முன்தினம் (ஜூன் 11) டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலைச் சந்தித்தார். அவருடன் அமைச்சர்கள் மனீஷ் சிசோடியா, கோபால் ராவ் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் உடனிருந்தனர். ஆனால், அனில் பைஜால் அவர்களது கோரிக்கை கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, அவரது வீட்டிலுள்ள காத்திருப்பு அறையில் அனைவரும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அங்கேயே தூங்கி எழுந்தனர். நேற்று (ஜூன் 12) இரண்டாவது நாளாக இவர்களது போராட்டம் தொடர்ந்தது. அனில் பைஜால் அவர்களைச் சந்திக்காத நிலையில், கெஜ்ரிவால் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களுக்கு எதிராகக் காவல் துறையில் அவர் புகார் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்த சத்யேந்திர ஜெயின் உடல்நலம் நலிவுற்றது. இதனால், அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்று மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். அதே நேரத்தில், டெல்லியிலுள்ள கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக ஆம் ஆத்மி கட்சியினர் குவிந்தனர்.



தற்போது நடப்பது டெல்லி மக்களுக்கான உரிமைப் போராட்டம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங். “அனில் பைஜால் டெல்லி அரசைச் செயலிழக்கச் செய்யும் வேலைகளைச் செய்துவருவதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இனிமேலும் நாங்கள் அமைதி காக்கப்போவதில்லை; இறுதிவரை போராடவிருக்கிறோம்” என்று அவர் கூறினார். தங்களது போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஆதரவு தருவதாகக் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் எந்த அதிகாரியும் டெல்லி அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான கூட்டமைப்பு. கடந்த நான்கு மாதங்களாக அங்குள்ள அதிகாரிகள் திறம்படச் செயலாற்றி வருவதாகவும் சமூக வலைதளப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் போராட்டத்திற்கு எதிராக, டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.