பால் டேம்பரிங்கில் சிக்கிய வீரர்!

கடந்த மார்ச் மாதம் தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் பால் டேம்பரிங் (பந்தைச் சேதப்படுத்துதல்) விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும்
பரபரப்புக்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியில் அந்தச் சர்ச்சை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதன் முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியிருந்தது. இரண்டாம் டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 253 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழை விட்டு மைதானம் விளையாடத் தயாரான போதும் வீரர்கள் விளையாட வரவில்லை. பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி தன் ட்விட்டர் பக்கத்தில் மூன்றாம் நாள் ஆட்டம் வழக்கம் போல் தொடங்கும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய போதும் வீரர்கள் மைதானத்துக்குள் வராதது அதிர்ச்சி அளித்தது. அப்போது தான் அதற்கான காரணம் வெளிவந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது தினேஷ் சந்திமல் பந்தைச் சேதப்படுத்தியதாக நடுவர்கள் சந்தேகம் அடைந்து வேறு பந்தை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத இலங்கை வீரர்கள், விளையாட மறுத்து டிரெஸ்ஸிங் அறையிலேயே இருந்துள்ளனர். இதனால் நடுவர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஆணைக்கு இணங்க இலங்கை அணி தொடர்ந்து விளையாடச் சம்மதித்தது. இதற்கு அபராதம் வழங்கும் விதமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஐந்து ரன்கள் வழங்கப்பட்டது.
இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்தப் போட்டியில் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியதீவுகள் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், தற்போது பந்தின் தன்மையை மாற்றிய குற்றத்திற்காக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமலுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக ஐசிசி இன்று (ஜூன் 17) அறிவித்துள்ளது. போட்டியின்போது சந்திமல், பந்தில் எச்சிலைக் கொண்டு தேய்த்துள்ளார். இது ஐசிசியின் விதிமுறைப்படி (Article 2.2.9 of the ICC's code of conduct) தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதற்கான தண்டனை விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. இது லெவல் 2 வகைக் குற்றம் என்பதால் சந்திமலுக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம்.
முன்னதாக தென்னாப்ரிக்க தொடரில் பந்தை உப்புத்தாள் கொண்டு சேதப்படுத்திய குற்றத்திற்காக, ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.