பசுமை வழிச்சாலை: தொடரும் துயரங்கள்!

பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று (ஜூன்21) தீக்குளிக்க முயன்றுள்ளனர்.


பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு எதிராக, சட்டம் என்றால் என்னவென்றுக் கூட தெரியாத விவசாயிகள், அந்தச் சட்டத்தை மதித்தும், ஜனநாயகத்திற்கு உட்பட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வது, மனு கொடுப்பது, விவசாய குறை தீர்கூட்டத்தில் பங்கேற்பது, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, நீதி மன்றத்தில் வழக்கு தொடருவது, தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடிய அமைப்புகளையும், கட்சிகளையும் தங்களின் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பேச செய்வது என அனைத்துக் கட்ட போராட்டங்களையும் கையிலெடுத்து தோற்றுப் போய் இன்று கண்ணீருடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர்.

பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40 ஆயிரம் வீடுகள், 8 மலைகளும் உடைக்கப்பட உள்ளது. கடந்த 18ஆம் தேதி நிலங்களை அளக்கத் தொடங்கியதிலிருந்து மக்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர், அந்த எதிர்ப்புகளை அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் கண்டுகொள்ளவேயில்லை.

மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புபவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

குருவி போல சேமித்துக் கட்டிய வீட்டை யாரோ ஒருவர் அபகரிக்க முயற்சித்தால் என்ன நடக்குமோ அது தான் இன்று தர்மபுரியிலும்,சேலத்திலும் நடந்து வருகிறது.

குமரேசன், வேடியம்மாள் மற்றும் சுஜித் ஆகிய மூவரும் இன்று தீக்குளிக்க முயற்சித்துள்ளனர், அதேபோல பாப்பிரெட்டிபட்டியை அடுத்த இருளப்பட்டி கிராமத்தில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தங்களது உடலில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை கலந்து ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளனர், இதைப் பொருட்படுத்தாத அதிகாரிகள் தங்கள் பணிகளை வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர்.

கைதும்,மிரட்டல்களும் தொடர்ந்து அப்பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. திருவண்ணாமலையில், நேற்று(ஜூன் 20) 21 விவசாயிகளை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

சாலை அமையவிருக்கும் பகுதி மக்களின் கண்ணீர் குரல்களைக் கேட்பவர்கள் நெஞ்சு நிலைகுலைந்து போகும். எங்க ஆத்தா..அப்பன் சம்பாதிக்கல.. எ..மாமா.. மாமனாரு சம்பாதிக்கல.. நாங்க காடு மேடா களைவெட்டி சேத்தது.. என்று அழுகுரலோடு கேட்ட கேள்விக்கு யார் பதில் சொல்லப் போவது?
Powered by Blogger.