திணிக்கப்பட்ட துறவும்...! பறிக்கப் பட்ட காதலும்...!


எனக்கென்று பல பிறவிகளில்லை.

எடுத்த பிறவியை இன்பமாய்
நகர்த்தவும் நீங்கள் விடவில்லை.
பெற்றவளுக்கு பிறப்பிடக் கவலை
போதித்தவருக்கு நானொரு பலிக்கடா.

இளமையில் துளிர்த்த
காதல் அரும்புகளை
பொத்திப் பொத்தி மூடி நடிக்க
நான் பட்ட அவஸ்தை யாரறிவீர்?

சாதாரண அழகி தான் நானும்.
என்னையும் ஒருத்தன்
துரத்தித் துரத்தி காதலித்தான்.
இருவருக்குமிடையில் சமூக ஏற்றத்தாழ்வு
மடுவும் மலையும் போல....

அவனிடமிருந்து காதலைப் பிடுங்க
என்னை ஒளித்தீர்கள்.
மறைப்பிட்டு மாயமிட்டீர்கள்.
உண்மையைச் சொல்லுங்கள்
அரச இளவலை ஒரு ஏழைமகள்
கரம் பிடித்திடுவாள் என்ற
கசப்புணர்வில் தானே
துறவு என்ற ஒன்றை
எனக்குள் திணித்தீர்கள்.?

எத்தனை வேடத்தை எனக்குத் தரித்தீர்கள்.
துறவு மறைவில் என்னை ஒரு
மாற்றான் மனைவியாக்கினீர்கள்.
இது தான் துறவின் தூய்மையா?

என்னை நேசித்தவனின்
உண்மைக்காதல் அன்று
வாளுக்கிரையாகி துடித்தது மண்ணில்...
கதறித் துடிக்கும் என் மனதை மாற்ற
நாடுகாண் பயணியாக்கி
சுற்றுலாவுக்கு அனுப்பினீர்கள்.

காதலின் துயரம் எத்துணை
கொடியது உணரவில்லையே நீங்கள்.
காதலின் துயரினால் தான்
நான் மனம் மருகி
துறவை துணைக்கொண்ட
கதையை யாரறிவீர்?
காதலை மறக்க முடியாமல்
கால் போன இடமெங்கும்
சேவையை செய்து ஆறிக் கொண்டதை
காப்பியமாக்கி களிகூர்ந்தீர்கள்.

எனக்கென்று பல பிறவிகளில்லை.
எடுத்த பிறவியை இன்பமாய்
நகர்த்தவும் நீங்கள் விடவில்லை.
இதோ... காதல் பித்தோடு
அலையும் இந்த அபலையை
சற்று நேரம் உற்றுப் பாருங்கள்.
நான் தான் மணிமேகலை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

குறிப்பு : மணிமேகலையாக அவளது மனதாக இருந்து வாசியுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.