அரசியலுக்கு அச்சாரம் போட்ட டைட்டில்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.


சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று (ஜூன் 21) மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தியுள்ளார். ‘சர்கார்’ என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய் சமீபகாலமாக பல படங்களில் அரசியல் கருத்துகளை பேசிவருகிறார். மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து வசனங்கள் இடம்பெற்றதால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. அந்த சர்ச்சைகளே படத்தின் வெற்றிக்கான காரணமாகவும் அமைந்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகளை விமர்சித்து இந்த படமும் உருவாகும் என்பதை ஏற்கனவே வெளியான புகைப்படங்களும் பழ.கருப்பையா, ராதா ரவி கதாபாத்திரங்களும் உணர்த்தின. இந்நிலையில் அரசாங்கம் எனப் பொருள்படக் கூடிய ‘சர்கார்’ என்ற தலைப்பு இப்படம் அரசியல் படமாக உருவாவதற்கான சாத்தியம் இருப்பதை உணர்த்தியுள்ளது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்த விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இது போன்ற செயல்கள் அவரது அரசியல் நுழைவுக்கான சமிக்ஞையாகவே பார்க்கப்பட்டது. அந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே படத்தின் தலைப்பு அமைந்துள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் ‘டைம் டு லீட்’ என அடித் தலைப்பு வைக்கப்பட்டதற்காக படத்தின் வெளியீட்டிற்கு பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நாளை விஜய் பிறந்த நாளை கொண்டாட அவரது ரசிகர்கள் ஆயத்தமாகியுள்ள சூழ்நிலையில் படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளதால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.