ரஜினி மீது வழக்கு: கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவு!

ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 13) உத்தரவிட்டுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தூத்துக்குடி மக்களை இழிவாகப் பேசியதாகக் கொடுத்த புகாரில் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். அதில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து பல்வேறு கட்சியினரும், நடிகர்களும் ஆறுதல் கூறிவந்தனர். கடந்த மே 30ஆம் தேதி நடிகர் ரஜினியும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே கலவரம் ஏற்பட்டதாகவும், போராட்டம் நடத்தியவர்களுக்குள் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டதாகவும் விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து, போராட்டம் நடத்தியவர்களைப் பற்றித் தவறான கருத்து தெரிவித்ததாக ரஜினி மீது ஓசூர் காவல் நிலையத்தில், ஓசூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்படாததையடுத்து, நடிகர் ரஜினி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சிலம்பரசன் ஜூன் 7ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.