கலவரத்தை தூண்டியதாக வழக்கறிஞர் கைது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி வழக்கறிஞர் வாஞ்சிநாதனை போலீசார் நேற்றிரவு(ஜூன் 20) கைது செய்தனர்.


மதுரையைச் சேந்த வாஞ்சிநாதன் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராகவும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நீக்கம் தொடர்பான வழக்கில் டெல்லி சென்று வாதிட்டபின், நேற்றிரவு விமானத்தில் சென்னை திரும்பியுள்ளார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் வைத்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடியில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவுக்கு சட்ட உதவிகளைச் செய்ததற்காக பழிவாங்கும் நோக்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலர் வழக்கறிஞர் ஹரிராகவன் மீதும், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் இருபதுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகள் போடப்பட்டுள்ளன. மக்கள் நலனுக்கு போராடுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வது கண்டத்துக்குரியது என மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்துவிட்டதும் பிரச்சனை அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைத்தால், அதற்கு பின்புதான், போலீஸாரின் கைது நடவடிக்கை அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மக்கள் கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு வெளியூரில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். இதனால், பெண்களும் சிரமத்துகுள்ளாகுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.