காங்கிரஸ் அழைக்கவில்லை: கமல்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தற்போதைய தமிழக அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து அதன் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வரும் நடிகர் கமல்ஹாசன், கட்சிக்கு அங்கீகாரம் வாங்குவது தொடர்பாக நேற்று (ஜூன் 20) டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு சென்றார். தங்கள் கட்சிக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார் கமல்ஹாசன். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழக அரசியல் சூழல் உட்பட, இரு கட்சிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாக ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் இன்று (ஜூன் 21) சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "நேற்று ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியதை தொடர்ந்து இன்று சோனியா காந்தியைச் சந்தித்து பேசினேன். சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. அதற்கான நேரம் இது இல்லை. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதித்தோம். காங்கிரஸிடமிருந்து எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர்களை கர்நாடகம் நியமிக்காதது குறித்து கர்நாடக முதல்வரிடம் பேசுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி மற்றும் ராகுலை கமல்ஹாசன் சந்தித்தது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இதனால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.