ஸ்ருதியின் இன்னொரு முகம்!

கமல் ஹாசனின் மகள் என்ற அறிமுகத்துடன் திரைத்துறைக்குள் நுழைந்திருந்தாலும் பாடகர், இசையமைப்பாளர், நடிகை என

பன்முகத் திறமையை நிரூபித்துள்ளவர் ஸ்ருதி ஹாசன். தனது தந்தையைப் போலவே திரையுலகின் அத்தனை துறைகளிலும் ஆளுமை கொண்டவராக உருவெடுத்துவரும் இவர் அடுத்ததாக நுழைந்துள்ள துறை திரைப்பட தயாரிப்பு.
லென்ஸ் பட இயக்குநர் ஜெயப் பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கும் ‘மஸ்கிட்டோ பிலாஸஃபி’ என்ற படத்தை தயாரிக்கிறார் ஸ்ருதி ஹாசன்.
எளிமையான கதைகள் மூலம் பரந்துபட்ட பார்வையையும், அசாத்திய கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தும் ஜெயப்பிரகாஷ் இந்தப் படத்தை முறையான திரைக்கதை, வசனங்கள் இல்லாமல் நடிகர்கள் அந்த நேரத்தில் உரையாடுவதை வைத்து யதார்த்தத்துக்கு அருகாமையில் உருவாக்கவுள்ளார். பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் இடையே நடைபெறும் விவாதமாக நான்கு நண்பர்களின் கதையை கூற உள்ளது இப்படம்.
1995 ஆம் ஆண்டு டச்சு நாட்டில் பிரபலமான ‘டோக்ம் 95’ என்ற திரைப்பட இயக்கம் திரைப்படங்களில் கையாளப்படும் செயற்கையான எதிர்பார்ப்பு, திசைதிருப்பல் போன்றவற்றை விடுத்து அந்த நேரத்தில் நடிகர்கள் பேசுவதை படமாக்கவேண்டும் என்ற கொள்கையுடன் உருவாகியது. இதன் படி இயக்குநரே கதாபாத்திரமாகவும் இருப்பார். அரங்கங்களில் அல்லாமல் கதை நிகழும் இடங்களிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதை உள்வாங்கியே ‘மஸ்கிட்டோ பிலாஸஃபி’ உருவாகவுள்ளது.
சிந்து ஜெயப்பிரகாஷ், ரவி கதிரேசன், பிரதீப் தாமோதரன், சுரேஷ் சோமசுந்தரம் குமார், சித்தார்த் நாயர் என அறிமுக நடிகர்கள் பலரும் நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் ஜெயப்பிரகாஷும் நடிக்கிறார்.
சங்கமித்ரா படத்திலிருந்து விலகிய பின்னர் ஸ்ருதி ஹாசன் தற்போது இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் படத்தில் நடித்துவருகிறார். கேங்ஸ்டர் பாணியில் உருவாகும், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் வித்யுத் ஜம்வால் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதியும் கேங்க்ஸ்டர் குழுவைச் சார்ந்தவராக வலம் வருகிறார். பல்வேறு நபர்களின் வாழ்வில் நடைபெறும் ஏற்ற இறக்கங்களுக்குக் காரணகர்த்தாவாக விளங்கும் கதாபாத்திரம் ஸ்ருதிக்கு அமைந்துள்ளது. மும்பையைத் தொடர்ந்து கோவாவில் நடைபெறும் படப்பிடிப்பில் ஸ்ருதி சமீபத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.