மல்லாகம் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட மற்றுமொரு சர்ச்சை!

யாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சிங்கள மொழியில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டிருந்ததாக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட பணிப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். மாவட்ட மனித உரிமை ஆணையாளர் கனகராஜ் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார்.
இதனையடுத்தே அவர் குறித்த குழப்பம் தொடர்பில் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில்,
மல்லாகம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரமே வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகநபர்கள் கூறிய விடயத்திற்கும் பதிவு செய்யப்பட்ட விடயத்திற்குமிடையில் முரண்பாடுகள் காணப்பட்டதால் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று சகல விடயங்களையும் அவதானித்து தேவையான தகவல்களை சேகரித்துள்ளோம்.
அத்துடன் பலியான நபரது உறவினர்கள் மற்றும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களிடமும் தகவல்களை பெற்றுள்ளோம்.
இந்த நிலையிலேயே தெல்லிப்பளை பொலிஸார் கைது செய்தவர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரமே வாக்கு மூலத்தை பதிவு செய்தமையால் சந்தேகநபர்கள் கூறிய விடயத்திற்கும் பதிவு செய்யப்பட்ட விடயத்திற்குமிடையில் முரண்பாடு காணப்பட்டமை தெரியவந்தது.
இதன்பின் தமிழ் மொழியில் வாக்கு மூலத்தை பதிவு செய்வதற்கான அறிவுறுத்தல்களையும், சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்களது சாட்சியங்களையும் பதிவு செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருந்தோம் என குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயமானது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளதுடன், இந்த சம்பவமானது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
Powered by Blogger.