கிராமங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு யார் காரணம்? மக்களா?அரசியல்வாதிகளா?

ஒரு கிராமத்தில் தவறுகள், தப்புக்கள் நடைபெறுகின்றது எனில் அதைத் திருத்தி அவர்களை வழிப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இருக்கின்ற நிலையில் அவர்களைத் தொடர்ந்தும்
குற்றஞ்சாட்டுவதில் அர்த்தம் இருக்காது.

கடந்த காலங்களைப் போல் இப்போது இல்லை. குழந்தை பிறந்ததில் இருந்து அவர்கள் முதியவர்களாகி இறக்கும் வரை அவர்களைக் கண்காணிப்பதற்கும் நலன்களைப் பேணுவதற்கும் அரச திணைக்களங்களில் உத்தியோகத்தர்கள் இருக்கின்றனர். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு காவல்துறை, நீதிமன்றங்கள் இருக்கின்றன.



இதற்கு அப்பால் எத்தனையோ அரச சார்பற்ற பொது நிறுவனங்கள் இருக்கின்றன. தொண்டு அமைப்புக்கள் உள்ளன. ஆன்மீக வழிப்படுத்தல்களை மேற்கொள்ளக்கூடிய சமய அமைப்புக்கள் இருக்கின்றன.

இத்தனையும் இருந்தும் கிராமங்களில் வழிதவறிப் போவதற்கு என்ன காரணம்? இவர்கள் அனைவரின் வேலைத்திட்டங்களும் தோல்வியில் முடிந்திருக்கின்றது என்பது தானே அர்த்தம்?

நவீனத்துவம் வளர்ந்துள்ள இப்போதைய காலத்தில்கூட பல கிராமங்கள் கல்வியில் பின்தள்ளப்பட்டு இருப்பதற்கு யார் காரணம்? உதுகள் உப்படித்தான்... திருந்தாதுகள்... எனப் பதில் கூறி அவர்களை ஓரம்கட்டுவது யார்..? கொலைகள்.. கொள்ளைகளுக்கும் அந்தச் சமூகம்தான் காரணம் எனக் கூறிக்கொண்டு நழுவிச் செல்ல முடியுமா...?

கிராமங்களில் புரையோடிப்போயுள்ள சில பிரச்சினைகளைக் கையாள்வதற்கு ஒரிரு நாள்களோ.. ஓரிரு வருடங்களோ போதுமானவை அல்ல... பத்தாண்டு... பதினைந்தாண்டு... திட்டங்களை வகுத்து உரிய பொறிமுறைகளுடன் கிராமங்களுக்குள் சென்று வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலமே இதில் வெற்றிபெற முடியும்.



அந்தக் கிராமங்களில் உள்ள சமூகமட்ட அமைப்புக்களை வலுவூட்டுவதன் மூலம் மக்களை வழிப்படுத்த முடியும். கல்வியில் பின்தங்கிய மக்கள் தாம் நினைத்ததை மட்டும்தான் செய்வார்கள். அதுவே அவர்களுக்கு சரியானதாகத் தெரியும். அவர்களை வெளியே கொண்டுவர யார் முயற்சியெடுத்தது?

பாண்டவெட்டை – காட்டுப்புலம் போன்ற இடங்களைக் குற்றம்சாட்டும் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் முதலில் சிறுவர்களில் இருந்து வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதன் மூலமே அடுத்து இருபது ஆண்டுகளுக்குள் இதுபோன்ற கிராமங்களில் நவீனத்துவ எழுச்சியை ஏற்படுத்த முடியும்.

பாண்டவெட்டை – காட்டுப்புலத்தின் அமைவிடம் இயற்கையோடு ஒட்டிய பிரதேசம். அதை மாதிரிக் கிராமமாக தத்தெடுத்து வேலைத்திட்டங்களை நகர்த்தினால் அடுத்த பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளில் அந்தக் கிராமத்தில் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியும்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் பணியாற்றிய அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இவ்வாறான விடயங்களை மேற்கொண்டிருந்தால் இன்று அந்த மக்களைக் குற்றம்சாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.



அதை விடுத்து அரச சுற்றுநிருபங்களுக்குள் முடங்கிக் கிடப்பதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது. முதலில் தற்றுணிபோடு பணியாற்றக்கூடிய திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த வேண்டும். உயர் அதிகாரிகளில் இருந்து கிராமமட்ட அதிகாரிகள் வரை இத்தகைய நெறிமுறையில் பயணிக்கவேண்டும்.

இப்போதுகூட நாம் கிராமங்களில் உள்ளவர்களைக் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தால் எதிர்காலத்திலும் இந்தக் குற்றச்சாட்டு அதிகரிக்குமே தவிர குறையாது. இவ்விடயத்தில் அரச, தனியார் நிறுவனங்கள், சமூகமட்ட அமைப்புக்கள், அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து பயணித்தால் உரிய இலக்கை அடைய முடியும்.

ஊடகவியலாளர் நல்லதம்பி பொன்ராசா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.