‘பழைய புத்தகம்’ விமர்சனம்: திருநாவுக்கரசர் கண்டனம்!

ஒதுக்கப்பட்ட பழைய புத்தகத்தை புரட்டிப் பார்த்திருக்கிறார் கமல் என்று ராகுல் மற்றும் சோனியா உடனான கமலின் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்ததற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது குறித்துத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் பேசுவதற்காக கமல்ஹாசன் நேற்று (ஜூன் 20) டெல்லி சென்றார்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பின்னர். மாலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை கமல் சந்தித்து பேசினார். தமிழக அரசியல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கமல் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சோனியா காந்தியை இன்று (ஜூன் 21) சந்தித்து கமல் பேசியுள்ளார்.

இந்நிலையில், நாகர்கோவிலில் இன்று (ஜூன் 21) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “பழைய புத்தகத்தினை கமல் புரட்டிப் பார்த்திருக்கிறார். அதுவாவது பயனுள்ள புத்தகமா என்று பார்த்தால் இத்துப் போன புத்தகம். கருத்தில்லாத புத்தகம். பயன் இல்லை என்று மக்களால் ஒதுக்கப்பட்ட புத்தகம். அதனைப் போய் புரட்டிப் பார்த்திருக்கிறார். இதனால் அந்தப் புத்தகத்திற்கும் பயன் இல்லை. திரும்பத் திரும்ப புரட்டிக் கொண்டிருப்பவருக்கும் பயன் இல்லை” என்று விமர்சித்திருந்தார்.

அவரது விமர்சனத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ கமல்- ராகுல் காந்தி இடையேயான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இதுபோன்ற சந்திப்புகள் எதார்த்தமானதுதான்” என்று தெரிவித்தார்.

அப்போது, பொன்.ராதாகிருஷ்ணனின் விமர்சனம் தரக்குறைவானது என்று தெரிவித்த அவர், “150 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய காங்கிரஸ் கட்சியைப் பழைய புத்தகம் என்று மத்தியில் உள்ள அமைச்சர் விமர்சித்துள்ளதை எதிர்பார்க்கவில்லை. ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்ததற்கு இவர் ஏன் ஆத்திரப்படுகிறார், கோபப்படுகிறார். இது தரம் தாழ்ந்த விமர்சனம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். காலாவதியான புத்தகம் எது என்பது இன்னும் 7 அல்லது 8 மாதங்களில் தெரிந்துவிடும். அவர்கள் கட்சியிலேயே பல மூத்த தலைவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் வெளியேறி வருகின்றன. எனவே, ஒரு விரக்தியில் இந்த சந்திப்பை ராதாகிருஷ்ணன் விமர்சித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து அவரது மகள் நமீதா பட்டாச்சார்யாவிடம் திருநாவுக்கரசர் கேட்டறிந்தார்.

No comments

Powered by Blogger.