கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்!

கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளதால் எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள்
தீர்மானிக்கட்டும் என வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு விழா, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது விசேட அதிதி கௌரவ சம்பந்தன் அவர்களின் வரவு எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்வையும் ஊட்டியுள்ளது.

என்னை இந்த முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தவர் அவரே. இதுவரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நான் நடந்து வந்துள்ளேன்.

கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்க முடியாதவன் நான்.

அதனால் எனக்கும் கட்சிக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பினும் என் நிலையைப் புரிந்து நடவடிக்கைகளில் இறங்கிவந்தவர் சம்பந்தன் அவர்கள்.

ஆனால் கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டுள்ளார்கள். எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.

சம்பந்தன் அவர்களின் வருகையாலோ என்னவோ கூட்டணியைச் சேர்ந்த பலர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற வந்துள்ளனர். அவருக்கும் அவ்வாறான பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.