சந்திமலுக்கு அபராதம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான செயின்ட் லூசியா டெஸ்ட் போட்டியின் போது பந்தை சிதைத்த (Ball Tampering) சர்ச்சையில் சிக்கிய இலங்கை அணிக் கேப்டன் தினேஷ் சந்திமலுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவருகிறது. இதன் முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியிருந்தது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியின் போது இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமல் பந்தைச் சிதைத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஆட்டமும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சந்திமல் பந்தைச் சேதப்படுத்தியது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டியின்போது சந்திமல் தன் பாக்கெட்டிலிருந்து ஸ்வீட் போன்ற ஒரு பொருளை எடுத்து வாயில் போட்டு மென்று, கையில் எச்சிலைத் துப்பி அதனைக் கொண்டு பந்தைத் துடைத்ததாக விளக்கம் அளித்துள்ளது. இதனால் தற்போது அவருக்கு இரண்டு தகுதியிழப்புப் புள்ளிகளுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் போட்டியின் முழு சம்பளமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது போட்டி வரும் 23ஆம் தேதியன்று பிரிஜ்டவுன் நகரில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் சந்திமல் இல்லாதது இலங்கை அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் இவருக்குப் பதிலாக அனுபவ வீரர் என்ற முறையில் ரங்கனா ஹெராத் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தலைமையில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஐசிசி கலந்தாய்வின் போது பந்தை சிதைக்கும் குற்றத்திற்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கப் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இம்மாத இறுதியில் டப்ளினில் (அயர்லாந்து) நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் பந்தை சிதைக்கும் குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படும் என ஐசிசியின் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.