அரசியல் பேசினோம்!

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.


கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்தார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். தேர்தல் ஆணையத்திடம் தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கொடுக்குமாறு மனு செய்தது மக்கள் நீதி மய்யம். இது தொடர்பாக யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, இன்று (ஜூன்20) காலை டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகம் சென்றுவந்தார் கமல்ஹாசன். விரைவில் தங்கள் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்குமென்று செய்தியாளர்களிடம் அவர் நம்பிக்கை தெரிவித்தார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கவில்லை.

இந்தச் சூழலில், இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார் கமல்ஹாசன். சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக இவர்களது சந்திப்பு நடந்தது. ராகுலின் வீட்டிலிருந்து வெளியே வந்த கமல், அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மரியாதை நிமித்தமான முறையில் ராகுலைச் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்தார்.

“பெங்களூருவில் நாங்கள் ஏற்கனவே சந்தித்துக்கொண்டோம். அப்போது, டெல்லி வந்தால் சந்திக்க வேண்டுமெனக் கூறியிருந்தார் ராகுல். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வந்தேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ராகுலைச் சந்தித்தேன்” என்று கூறினார். ராகுலுடன் அரசியல் பேசியதாகத் தெரிவித்த கமல், தமிழ்நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற குசல விசாரிப்பாகத் தங்களது பேச்சு அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியிடம் பேசியது பற்றி செய்தியாளர் சந்திப்பில் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், மாபெரும் கூட்டணி குறித்து அவரிடம் தான் எதுவும் பேசவில்லை என்றும் கூறினார். காவிரி மேலாண்மை ஆணைய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்திக்கப் போவதில்லை என்றார் கமல்ஹாசன்.

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஆளுநர் அனில் பைஜால் வீட்டில் நடத்திய போராட்டம் குறித்துக் கேட்டபோது, “அவர் நல்ல முடிவுக்கு வந்ததற்கு சந்தோஷம்” என்று தெரிவித்தார். அதுபற்றி, வேறெந்த விளக்கமும் அவர் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனைச் சந்தித்தது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல், தங்களது சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் சூழல் உட்பட, இரு கட்சிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.