நவீன கருவிகள், நடுங்கும் மக்கள்!

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் ஒன்றியம், குப்பனூர் பஞ்சாயத்து, பெரியாம்பட்டி என்ற ஊரை ஒட்டியுள்ள விளை நிலங்கள் வழியாக எட்டு வழி பசுமைச்சாலை அமைக்கும் பணிக்கான இடங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

குப்பனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாலை ஓரங்கள் முழுவதும் போலீசாரின் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போவோர் வருவோர் எல்லோரிடமும், காவலர்கள் விசாரணை செய்த பின்னரே அந்த வழியாக போக அனுமதிக்கின்றனர்.
பெண்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சீருடை இல்லாத பெண் போலீசாரும் ஓவ்வொரு இடத்திலும் நிறுத்தப்பட்டுள்ளனர். வாழப்பாடி, ஆத்தூர், சேலம் புறநகர் என மூன்று சப்-டிவிஷன் போலீசாரும் இந்த பகுதியில் தான் நிற்கின்றனர்.
மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் நிலஅளவைத் துறை அதிகாரிகள் செயற்கை கோள் துணையுடன் நிலங்களை அளவீடு செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் மூன்று கிலோ மீட்டர் தொலைவு என்ற கணக்கீட்டில், சேலம் மாவட்ட எல்லையில் உள்ள வெள்ளையப்பன் கோயிலில் துவங்கிய பணி நான்காவது நாளான இன்று பெரியாம்பட்டியில் நடைபெற்று வருகிறது.
வழக்கம் போல சர்வே செயின், கிராஸ் டாப் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி அளவீடு செய்யாமல், தமிழகத்திலேயே முதன் முறையாக டியோடாலைட் ஜி.பி.எஸ் டிரான்ஸ் மீட்டர் என்ற நவீன கருவியின் துணையுடன் வேலை நடைபெற்று வருகிறது.
கூகுள் மேப் உதவியுடன் வரையப்பட்டுள்ள மாதிரி வரை படத்தில் குறிப்பிட்டுள்ள அளவீடுகளின் அடிப்படையில் வரும் சிக்னல்களை பெறும் இந்த கருவி “பீப்” என்று ஒலி எழுப்பும் இடத்தில் அடையாளமிட்டு முன்னூறு மீட்டர் நீளத்துக்கு ஒரு இடத்தில் முட்டுக்கல் நடப்பட்டு வருகிறது. சாலைக்கு தேவையான எழுபது மீட்டர் அகலத்தில் இரண்டு பேர் இந்த நவீன கருவியுடன் இடங்களை அடையாளமிட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று நாளாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் நில உரிமையாளர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் போலீசார் கைது செய்து காவல் நிலையங்களுக்கு கொண்டுபோய் அடைத்து வைத்ததைத் தொடர்ந்து இன்று எந்த விவசாயியும் அதிகாரிகள் இருந்த பக்கமே வரவில்லை. இதனால், பணி தடையின்றி நடைபெறுகிறது.
பெரியாம்பட்டி சின்னக்கரடு அருகிலுள்ள முருகேசன் என்பவரின் இரண்டே கால் ஏக்கர் நிலமும் இந்த சாலை பணிக்காக கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்போ, நோட்டீசோ அவருக்கு வழங்கப்படவில்லை.
முருகேசனுக்கு பக்கத்து நிலத்துக்காரரான பெரியண்ணன் என்பவரின் மகன்களின் இரண்டு வீடுகளும், இரண்டு ஏக்கர் நிலமும் எட்டு வழிச் சாலைக்காக பறி போகிறது. “சொந்தமாக விவசாயம் செய்து வாழ்ந்து வந்த நாங்கள் நாளைக்கு எங்கே போவது என்பது தெரியவில்லை..” என்கிறார் முருகேசன்.
இதே ஊரை சேர்ந்த பண்ணாடி என்பவருக்கு ஏழு இடங்களில் சொந்த நிலம் இருந்துள்ளது. உள்ளூர் சோதிடர் ஒருவர் “பரம்பரை சொத்தை அனுபவித்தால் குடும்பத்துக்கு ஆகாது...” என்று சொன்னதை தொடர்ந்து, ஏழு இடங்களில் இருந்த நிலத்தை எல்லாம் விற்று இப்போது, பெரியாம்பட்டி கரட்டுக்கு மேற்கில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அதில், ஐந்து ஏக்கர் இப்போது எட்டு வழி சாலைக்காக போகிறது.
அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கையையும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டையும் நினைத்து பயந்து போயுள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், திமுக தலைமை இப்போது போராட்டத்தை துவங்கியுள்ளது.
சென்னை-சேலம் பசுமை சாலை திட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தவும், அதுவரை விளை நிலங்கள் வழியாக நடத்தப்படும் அளவீடு செய்யும் பணியை நிறுத்தி வைக்கவும், சாலை அமைப்பதற்கு எதிராக போராடும் மக்கள் மீதான அ.தி.மு.க அரசின் காவல்துறை அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தும் அவரும் 23-6-2018 அன்று காலை பத்து மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில், சேலம் மாவட்டப் பொறுப்பாளர்களான ராஜேந்திரன், எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ராஜா ஆகியோர் முன்னிலையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த போராட்ட அறிவிப்பு சோர்ந்து போயுள்ள மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுக்கிறது.
Powered by Blogger.