தங்கத்துக்கு அமைச்சர் பதவி, எடப்பாடி தூண்டில்!

" தங்க.தமிழ்ச்செல்வனை வீட்டுக்கு அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் தினகரன். ஆனாலும், தங்க தமிழ்ச்செல்வன் கோபம் குறையவே இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.

அதனால் தான் அன்று மீடியா முன்பு பேசும்போது, 'நான் மட்டும் வழக்கை வாபஸ் வாங்குகிறேன். மற்றவர்கள் வழக்கு நடக்கும்' என்று சொன்னார். இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் சிலரை சந்தித்து இன்று பேசியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அவருக்கு ஆலோசனை சொன்னவர்களோ, 'நீங்க வழக்கை வாபஸ் வாங்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அப்படி வாங்கினால் உங்கள் தொகுதி காலி என உடனே அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்து 6 மாதத்தில் தேர்தல் நடந்த வேண்டும். நடத்தாமல் இழுத்தடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு எலெக்‌ஷன் கமிஷன் பல காரணம் சொல்லலாம்.' என்று சொன்னார்களாம்.

அதற்கு தங்க தமிழ்ச்செல்வன், ' தேர்தல் எப்போ வேண்டுமானாலும் நடத்தட்டும். எப்போ தேர்தல் நடந்தாலும் நான்தான் அங்கே ஜெயிப்பேன். மக்களுக்கு எதுவும் செய்ய முடியலைன்னு பதவியை தூக்கிப்போட்டவன் என்ற அனுதாபம் மக்களுக்கு வரும். இதைத்தான் 17 பேரையும் செய்யச் சொன்னேன். அவங்களும் கேட்கல. சாரும் கேட்கல. அப்புறம் என்ன செய்யுறது? எனக்காக இதுவரைக்கும் நான் எதுவும் கேட்டது இல்ல. அவருக்காகத்தான் எல்லோரும் பதவியை துறந்துட்டோம். இப்போ நான் கேட்டதும் எல்லோர் நல்லதுக்கும்தான். அதை சார் ஏன் புரிஞ்சுக்கலையோ தெரியல..' என்று புலம்பியிருக்கிறார்." என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து அடுத்த மெசேஜ்ஜும் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

"தங்க தமிழ்ச்செல்வன் வருத்தத்தில் இருப்பது தெரிந்து எடப்பாடி தரப்பில் தொடர்ந்து அவரை துரத்த ஆரம்பித்து இருக்கிறார்களாம். அண்ணா நகரில் வசிக்கும் அமைச்சர் ஒருவர் இரவு மணிக்கணக்காக தமிழ்ச்செல்வனுடன் பேசுகிறாராம். நீங்க ஓகேன்னா உங்களை அமைச்சராக ஆக்கவும் அண்ணன் ரெடியா இருக்காரு...என்று டீல் நடந்திருக்கிறது. ‘நான் தான் இப்போது எம்.எல்.ஏ. இல்லையே அப்புறம் எப்படி அமைச்சர் ஆக முடியும்?’ என தமிழ்ச்செல்வன் கேட்டாராம். அதற்கு அந்த அமைச்சர், ‘நீங்க ஓகே சொல்லுங்க... நாங்க ஆக்கி காட்டுறோம்' என்று உறுதி கொடுத்திருக்கிறார். அதற்கு தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்கவே இல்லையாம். ஆனாலும் விடாமல் துரத்துகிறது எடப்பாடி தரப்பு.

மீதியுள்ள எம்.எல்.ஏக்களில் 6 பேரை குறிவைத்து அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் சமாதானப் படலத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆக, எடப்பாடி டார்கெட் 7. எப்படியும் தீர்ப்புக்கு முன்பு 7 பேரை வளைத்து விட வேண்டும் என அமைச்சர்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்" என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து விட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.
Powered by Blogger.