வடகொரியா மீதான பழைய தடை உத்தரவுகளை அதிபர் டிரம்ப் புதுப்பித்துள்ளார்!

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியா மீதான பழைய தடை உத்தரவுகளைப் புதுப்பித்துள்ளார்.


வட கொரிய அணுவாயுதங்களால் உருவாகும் மிகப் பெரிய அச்சுறுத்தலைக் காரணம்காட்டி அவர் தடைகளைப் புதுப்பித்துள்ளார்.

பத்து நாட்களுக்கு முன்னர்தான் அவர், பியோங்யாங்கிடமிருந்து எந்த அபாயமும் இல்லை என்று கூறியிருந்தார்.

அணுவாயுத விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும், முழுமையான அணுவாயுதக் களைவு தொடங்கிவிட்டதாகவும் கடந்த வியாழக்கிழமை தமது அமைச்சரவைக் கூட்டத்தில் திரு. டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், மறுநாளே நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட அதிபர் பிரகடனத்தில், தமது நிர்வாகம் பியோங்யாங் மீது ஏன் கடுமையான பொருளியல் தடைகளைத் தொடர்கிறது என அவர் விளக்கியிருந்தார்.

அதிபர் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்துக்கொண்டபோது, முழுமையான அணுவாயுதக் களைவை நோக்கிச் செயலாற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

ஆனால், அது எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது ஆவணத்தில் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிடப்படவில்லை.

அது, வடகொரிய அணுவாயுதத் திட்டத்திற்கு எதிரான அனைத்துலகக் கூட்டணியை பலவீனப்படுத்தக் கூடுமென கவனிப்பாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.