இலங்கை ’சாகச சைக்கிள் பந்தயத்தில்’ நேபாள வீரர் ஆற்றில் மூழ்கி பலி!

கொழும்பு: சாகச சைக்கிள் பந்தயத்தில், நேபாள வீரர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.


இலங்கையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பில் 4வது ஆண்டாக வனப்பகுதிக்குள் சாகச சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டது. உயர்ந்த மலைப்பகுதியில் டீ பயிரிடப்பட்டிருந்த பகுதிகளில் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் சைக்கிள் பயணத்தில் ஆறுகளையும், ஆபத்தான வன விலங்குகளையும் கடந்து செல்ல வேண்டும். பாறைகள், நிலப்பகுதிகள் என பல கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதில் வெல்வதற்கு 5 நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும். வெப்பம் நிறைந்த பகுதி, குளிர்ச்சியாக பகுதி என பல்வேறு நிலைகளில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். ஒருகட்டத்தில் நேபாள அணியைச் சேர்ந்த வீரர்கள், போட்டியில் முன்னணியில் இருந்தனர்.

இந்நிலையில் அந்த அணியின் 33 வயது மதிக்கத்தக்க வீரர் ஒருவர், மஹாவெலி நதியைக் கடந்து செல்கையில், எதிர்பாராதவிதமாக மூழ்கினார். உடனே பிற வீரர்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் இலங்கை காவல்துறை தலைமையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் ஆற்றின் வழித் தடத்தில் நேபாள வீரரின் உடல், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக கண்டி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து போட்டி ரத்து செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Powered by Blogger.