புகையிலைக்கு அடிமையாகும் இந்தியர்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 23 கோடிப் பேர் புகையிலை உட்கொள்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உயிர்க்கொல்லியாக அறியப்படும் புகையிலையின் பயன்பாடு இந்தியாவில் மிக அதிகமாகவே உள்ளது. பல்வேறு பரிமாணங்களில் புகையிலை மக்களால் புகைக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலகில் சுமார் 70 கோடிப் பேர் தினமும் புகைபிடிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்களில் 60 லட்சம் பேர் பலியாகின்றனர்.
புகைப் பழக்கத்தால் இறப்பவர்களில் 6 லட்சம் பேர் நேரடியாகப் புகைப்பவர்கள் அல்ல எனவும், புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே 17 சதவிகிதப் பேர் பலியாகின்றனர் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில் ’சர்வதேச வயதுவந்தோர் புகையிலை சர்வே’ இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் ஜூன் 6ஆம் தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள 15 வயதுக்கு மேற்பட்ட வயதுவந்தவர்களில் சுமார் 28.6 சதவிகிதத்தினர் புகையிலை பயன்படுத்துபவர்களாக உள்ளனர். அதாவது இந்திய மக்கள் தொகையில் 26.68 கோடிப் பேர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். இதில் குறிப்பாக 23.24 கோடிப் பேர் (24.9%) தினசரி புகைப்பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும், 3.44 கோடிப் பேர் அவ்வப்போது புகையிலை உட்கொள்பவர்களாக உள்ளனர். இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் புகையிலையாகக் கைனி உள்ளது.
இது சராசரியாக வயதுவந்தவர்களில் ஒன்பது பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
கிராமப் புறங்களில் ஒவ்வொரு மூன்று பேருக்கு ஒருவரும், நகர்ப்புறங்களில் ஒவ்வொரு ஐந்துபேருக்கு ஒருவரும் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.