இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு என்ன??

சில இறக்குமதிப் பொருட்களுக்கு இந்தியா 100 விழுக்காடு வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.


கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் ஜூன் 9ஆம் தேதி அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், "அனைவரும் திருடுவதற்கு ஏதுவான உண்டியலைப் போல் நாங்கள் ஆகிவிட்டோம். வளர்ந்த நாடுகள் மட்டும் இறக்குமதி வரியை அதிகமாக விதிக்கவில்லை. நான் ஜி7 நாடுகளை மட்டும் குற்றம்சாட்டவில்லை. வளரும் நாடுகளும் எங்களுக்கு இறக்குமதி வரியை அதிகமாகவே விதிக்கின்றன.

இந்தியா எங்களிடம் இறக்குமதி செய்யும் சில பொருட்களுக்கு 100 விழுக்காடு இறக்குமதி வரியை விதித்துள்ளது. ஆனால், நாங்கள் அவர்களுக்கு அவ்வாறு எதற்கும் 100 விழுக்காடு வரி விதிக்கவில்லை. இதுபோல பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு வரி விதிப்பதை அந்நாடுகள் நிறுத்தவில்லை என்றால் அவர்களுடன் வர்த்தகம் செய்வதை நாங்கள் நிறுத்த நேரிடும்" என்றார்.

அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இந்தியா இறக்குமதி வரியை உயர்த்தியதைக் குறித்தே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவை விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்கா, இந்தியாவின் சில உருக்குப் பொருட்களுக்கு உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறி வரியை உயர்த்தியுள்ளதாக இந்தியாவும் குற்றம்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.