இந்தியாவில் தலித் பெண்களின் நிலை!

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, தலித் பெண்களுக்கு மரண வயது சராசரியாக 39.5 ஆண்டுகளாகவும், உயர் சாதிப் பெண்களுக்கு 54.1 ஆண்டுகளாகவும் இருப்பதாகத்

தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தலித் பெண்கள் மேல் சாதி பெண்களைவிடக் குறைவான வயதிலேயே இறந்துவிடுகின்றனர் என்று அறியப்பட்டுள்ளது.
தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகள் அவற்றை எதிர்த்துப் போராடுவதன் மூலமாக வெளிவருகின்றன. ஆனால் அவர்களுக்கு சுகாதார ரீதியாகவும் பாகுபாடு காட்டப்படுவது இந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
“மொத்த மக்கள் தொகையில் 16.6 சதவிகித தலித் மக்கள் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைவான கல்வி வாய்ப்புகள், உடல்நலத்தை பாதிக்கும் வகையிலான தொழில்களைச் செய்ய வேண்டிய கட்டாயம், வேலைவாய்ப்பு, வீடுகள் மற்றும் இதர வளங்களை பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் அதில் காட்டப்படும் பாரபட்சம் ஆகியவற்றால் தலித் சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.
இது போன்ற பாரபட்சத்தால் தலித்பெண்களின் உடல்நிலை மோசமடைவதாக தேசிய குடும்ப சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
25-49 வயதுடைய பெண்களிடையே இரத்த சோகை உள்ளவர்களில், 55.9 சதவிகிதம் பேர் தலித் பெண்களாக உள்ளனர். .இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பரவலான பிரச்சினையாக இரத்த சோகை இருந்தாலும், தலித் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை பெரும் சிக்கலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
உயர் சாதிப் பெண்களைக் காட்டிலும் தலித் பெண்கள் 14.6 ஆண்டுகளுக்கு முன்பாகவே இறப்பைச் சந்திக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தலித் பெண்களுக்கு மரண வயது சராசரியாக 39.5 ஆண்டுகளாகவும், உயர் சாதிப் பெண்களுக்கு 54.1 ஆண்டுகளாகவும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சட்டத்தின் கீழ், "தீண்டாமை" அடிப்படையில் மருத்துவமனையிலோ, மருத்துவத்துக்கோ அனுமதிக்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் 2016ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் புரான்புர சமூக நல மையத்தில் பணிபுரியும் செவிலியர், தலித் பிரிவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட கால தாமதத்தால் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்துவிட்டது. இதுபோன்று நடப்பது முதன்முறையல்ல. பொதுவாக தலித் பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
சுமார் 70.4 சதவிகித தலித் பெண்களுக்கு மருத்துவமனை செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு, மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி மறுப்பது, நெடுந்தூரத்திலுள்ள மருத்துவமனைகள், கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாமை ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. 52.2 சதவிகித தலித் பெண்கள் மட்டுமே மருத்துவமனைகளில் குழந்தையைப் பெற்றெடுக்கின்றனர். ஆனால் இதில் உயர் சாதிப் பெண்களின் எண்ணிக்கை 66.8 சதவிகிதமாக உள்ளது.
தலித் பெண்களின் ஊட்டச்சத்து நிலையைப் பொறுத்தவரையில், 15-49 வயதிற்குட்பட்ட பெண்கள் மத்தியில் உள்ள நான்கு பெண்கள் தங்கள் உடல் நிறை குறியீட்டெண்படி (பிஎம்ஐ) எடை குறைவாக உள்ளனர், அதே நேரத்தில் உயர் சாதிகளில் ஆறு பெண்களில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது.
தலித்துகளுக்கு எதிராக பல்வேறு சூழலிலும் பாகுபாடு காட்டப்பட்டுவந்த நிலையில் சுகாதாரத்திலும் பாகுபாடு காட்டப்படுவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
Powered by Blogger.