காலா யார்? ஓயாத சர்ச்சை!

காலா திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் தனது தந்தை திரவியம் நாடாரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது

என்றும், படத்தில் அவரது பெயரைக் குறிப்பிடாதது மோசமான செயல் என்றும் கூறி அவரது மகன் ஜவஹர் காலா படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
காலா திரைப்படம் வெளி வருவதற்கு முன்பே அதன் கதை தாராவியில் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்த திரவியம் நாடாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என்று கூறி அவரது மகன் ஜவஹர் சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தைத் தடை செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு படம் வெளியானது. மேலும் காலா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே, மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடாரின் மகள் விஜயலட்சுமி, “இது என் தந்தை கதை எங்கள் அனுமதியில்லாமல் எடுக்கிறார்கள்” என்றும் கூறியிருந்தார்.
காலா படம் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில், திரவியம் நாடாரின் மகன் ஜவஹர் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் “காலா சேட் என்ற பெயரே தன் தந்தை திரவிய நாடாரின் நிறத்தை வைத்து மும்பைக்காரர்கள் அவரை அன்பாக அழைத்த பெயர். அவர் வெல்லம் விற்கும் தொழில் செய்ததால் கூடுவாலா சேட் என்றும் அழைக்கப்பட்டார். மேலும் காலா படத்தில் காட்டப்படும் காமராஜர் நினைவுப் பள்ளி, எனது தந்தையால் 1960-களில் கட்டப்பட்ட பள்ளி. அதை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ரஜினிகாந்த் அணியும் உடை பாணியும் தனது தந்தையைப் போன்று இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் அவர் எப்பொழுதும் வெள்ளை நிறம் அணிந்திருப்பார். மேலும் திரவியம் நாடார் எப்போதுக் குடையுடன்தான் இருப்பார். வெயில் என்றாலும், மழை என்றாலும் அவரது கையில் குடை இருக்கும். காலாவிடம் தாராவியே அடங்கி இருந்தாலும், அவர் தன் மனைவியிடம் அடங்கிப் போவது போலக் காட்சி உள்ளது.
இப்படி அவரது வாழ்க்கையில் இருந்து இத்தனை விஷயங்கள் எடுத்து படமாக்கிவிட்டு, அவரது பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் இருப்பது மோசமான செயல், எங்களுக்கு பணம் தேவையில்லை. ஆனால் ரஞ்சித் தாராவியில் வந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்து, ஆராய்ந்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அவருக்கு என் தந்தை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை” என்று ஜவஹர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
1957ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மும்பை சென்று சிறிய தொழில்கள் செய்து வந்தவர் திரவியம் நாடார். அதன் பின் ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க அவர் அந்தப் பகுதியின் முக்கியமான ஆளுமையாக உருவெடுத்துள்ளார். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் ஆகியோரோடு தொடர்பில் இருந்துள்ளார். கூடுவாலா சேட், காலா சேட் என அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்ட அவர் 2003ஆம் ஆண்டு மறைந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.