மறுபடியும் தவறு செய்வேன் : கஸ்தூரி!

ட்விட்டரில் தங்களை இழிவுப்படுத்தியதாக கூறி நடிகை கஸ்தூரியின் வீட்டைத் திருநங்கைகள் முற்றுகையிட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் கஸ்தூரி.


சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் எனத் தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதியான சுந்தர், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்திருந்தனர். இந்தத் தீர்ப்பு குறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். நடிகை கஸ்தூரியும் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். பின்னர், அதை நீக்கிவிட்டார்.

இந்நிலையில், ட்விட்டரில் கஸ்தூரி பதிவு செய்திருந்த கருத்துகள் தங்களை இழிவுப் படுத்துவதாக திருநங்கைகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மதுரை காவல் ஆணையரிடம் நேற்று(ஜூன்16) புகார் அளித்தனர். மேலும் சிநேகிதி அமைப்பைச் சேர்ந்த ரேணுகா தேவி என்பவர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கை ஸ்வேதாவை தொடர்பு கொண்டு பேசிய போது, “எங்கள் சமூகம் பற்றி தவறாக சித்தரித்து கருத்து தெரிவித்த கஸ்தூரியிடம் முறையிடச் சென்றோம். கடந்த ஆண்டு அவர்களை கூவாகம் விழாவிற்கு எங்கள் சமூகம் சார்ந்தவர்கள் அழைத்திருந்தார்கள். அவரும் அங்கு வந்து, நடந்த நிகழ்வுகள் எல்லாம் பார்த்தார். எங்களைப் பற்றிய புரிதல் மற்றவர்களை விட அவருக்கு அதிகம் இருந்தும் ஏன் இப்படிச் செய்தார் என்பதுதான் வருத்தம். அதனால் இதற்கு நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மேலும் இனி எங்களைப் பற்றி யாரவது தவறாக சித்தரித்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை எதிர்த்துப் போராடுவோம்.” என்றார் ஸ்வேதா.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்டு கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “2 நாட்களுக்கு முன்னதாக வேடிக்கையாகப் பேசுவதாக எண்ணி மிகவும் தவறான ஒரு ட்வீட்டை பதிவு செய்து விட்டேன். அதனால் நாம் மிகவும் மதிக்கும் என்னுடைய நண்பர்கள், சகோதர, சகோதரிகளின் மனது வேதனைப்படுகிறது என்பதை அறிந்த உடனே அந்த ட்வீட்டை நான் நீக்கிவிட்டேன். பகிரங்கமாகவும் மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.

நான் எல்ஜிபிடி சமுதாய மக்களிடம் நேரடியாகவே விளக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளேன். சமூக வலைதளங்களிலும் நேரடியாகவே திருநங்கைகளிடம் வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்பு கேட்டு உள்ளேன். அவர்களும் என்னைப் பெருந்தன்மையாக மன்னித்து இதனைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நீக்கப்பட்ட பதிவை ஸ்கீரின்ஷாட் எடுத்துப் பரப்புவதால் உண்மைக்குப் புறம்பான சர்ச்சையாக இது மாறுகிறது. மீண்டும் மீண்டும் இந்த ஸ்கீரின்ஷாட்டை பரப்புவதால் என்னுடைய சகோதர சகோதரிகளை கொச்சைப்படுத்திக் காயப்படுத்துகிறீர்கள். என்னுடைய மனதையும் காயப்படுத்துகிறீர்கள். நானும் மனுஷிதான். மறுபடியும் நான் தவறு செய்வேன். தவறு செய்யாமல் யாரும் இருக்க மாட்டார்கள். அப்போது என்னை நீங்கள் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். இப்போது நான் செய்தது தவறுதான், இதை விட்டுவிடுங்கள். என்னோடு சேர்த்து ஒரு சமூகத்தின் உணர்வைக் காயப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.