சென்னையில் குடிநீர் கட்டணங்கள் உயர்வு!

சென்னையின் மையப் பகுதியையும், சுற்றுவட்டாரப் பகுதிகளையும் சேர்ந்த நுகர்வோருக்கும், வர்த்தக நுகர்வோரில் ஒரு பகுதியினருக்குமான கட்டணங்களை மே மாதம் முதல் திருத்தியமைத்துவிட்டதாக சென்னை பெருநகரக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாக குடிநீர் விலையைத் திருத்தியமைப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்தத் திருத்தத்தின் படி, குடிநீருக்குத் தற்போதுள்ள விலையை விட 60 விழுக்காடு கூடுதலான விலையைச் சென்னை வாசிகள் வழங்க வேண்டியிருக்கும். வருவாய்க்கும், செலவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்யக் குடிநீர் கட்டணங்களை உயர்த்தச் சென்னை பெருநகரக் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. எனினும், திருவொற்றியூர், மாதவரம் போன்ற பகுதிகளில் ஏற்கெனவே குடிநீருக்குக் கூடுதலான கட்டணங்கள் செலுத்தப்பட்டு வருவதால், அப்பகுதிகளில் கட்டணம் திருத்தப்படவில்லை. இனி, குடிநீருக்கான கட்டணம் ஒவ்வொரு ஆண்டுக்கும், நுகர்வோருக்கு 5 விழுக்காடும், வர்த்தக நிறுவனங்களுக்கு 10 விழுக்காடும் உயர்த்தப்படும்.
இதுவரையில் மாதம் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த நுகர்வோர், இனி மாதம் 80 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அரையாண்டு வாரியாக, ஒவ்வொரு அரையாண்டுக்கும் 480 ரூபாய் கட்டணம் செலுத்தலாம். 10 கிலோ லிட்டர் நீர் வரைப் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் 2.50 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கட்டணங்களைச் சென்னை பெருநகரக் குடிநீர் வாரியம் திருத்தியமைத்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.