மன்சூர் அலிகான் கைது!

சேலம் பசுமைவழிச் சாலைக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார்.


சேலத்தில் உள்ள நீர்நிலைகளைப் பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர் அலிகான் சில தினங்களுக்கு முன்பு கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்குச் சென்றார். அங்குள்ள சமூக ஆர்வலர் ப்யூஸ் மனுஷ் உடன் இணைந்து ஏரிகள் தூர்வாருதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டார்.

அதன்பிறகு அவர் அளித்த பேட்டியில், “சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதைக் காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக் கூடாது. மேலும், அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் கட்டாயமாக கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டுச் சிறைக்குச் செல்வேன்” என்று கூறினார்.இதையடுத்து வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேசியதாக மன்சூர் அலிகான் மீது சேலம் தீவட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, சென்னைக்கு இன்று வந்த சேலம் போலீஸார், மன்சூர் அலிகானை அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து, அவரை சேலத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நிகழ்கால அரசியல் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பல்வேறு கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்துவரும் நிலையில் போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட சீமானின் கைதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சமூக ஆர்வலர் ப்யூஸ் மனுஷ் தனது ஃபேஸ்புக் பதிவில் “சேலம் போலீஸ் மன்சூர் அலிகானை கைது செய்திருக்கிறது. எதற்காக? ஏரியைத் தூர்வாரியதற்கு, மரங்கள் நட்டதற்கு, ஏரியை மறுசீரமைப்பு செய்ய பணம் கொடுத்ததற்கு மற்றும் எட்டு வழி சாலை அமைந்தால் மக்கள் என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திப்பார்கள் என்பதை விளக்கியதற்காக... இவைகள்தான் பெரிய குற்றங்களாக தமிழக போலீஸார் பார்வையில் தெரிகிறது” என்று தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.