நீட் குளறுபடிகள்: பதில் கேட்கும் நீதிபதிகள்!

நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


நீட் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், " கடந்த மே மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த 1.07 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில், தமிழ் வழிக் கல்வியில் சமச்சீர் பாடத் திட்டத்தில் படித்த 24 ஆயிரம் மாணவர்களும் அடங்குவர். நீட் தேர்வில் வினாக்களைத் தமிழில் மொழிபெயர்த்ததில் 49 கேள்விகள் தவறாக இருந்தன.

எனவே, தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு ஒரு வினாவுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும் அல்லது தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (ஜூன் 13) நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ”நீட் தேர்வில் வினாக்களை தமிழில் மொழிபெயர்த்ததில் 49 கேள்விகள் தவறானது குறித்து சிபிஎஸ்இ பதிலளிக்க வேண்டும். தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசும், மாநில அரசும் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Powered by Blogger.