இரட்டை சதமடித்த சிறுமி!

நியூசிலாந்து, அயர்லாந்து மகளிர் அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அமெலியா கெர் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே அசத்தி 305 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற முக்கிய பங்கு வகித்துள்ளார்.


நியூசிலாந்து மகளிர் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் நியூசிலாந்து அணி முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளில் முறையே 346 மற்றும் 306 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இருந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டி டப்ளின் நகரில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 440 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தொடக்க வீராங்கனை அமெலியா கெர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 145 பந்துகளில் 232 ரன்கள் விளாசினார்.

பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 44 ஓவர்களில் 135 ரன்களில் சுருண்டது. இம்முறை பந்துவீச்சில் அசத்திய அமெலியா, 7 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 305 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்தத் தொடரின் சிறந்த ஆட்டக்காரருக்கான விருது அமெலியா கெருக்கு வழங்கப்பட்டது.இந்தத் தொடரில் நியூசிலாந்து மகளிர் அணி பதிவு செய்த ஸ்கோர் விவரம்:

முதல் போட்டி: 490/4(50)

இரண்டாவது போட்டி: 418/10(49.5)

மூன்றாவது போட்டி: 440/3(50)

நியூசிலாந்து அணி இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் 400 ரன்களை சாதாரணமாகக் கடந்துள்ளது. ஆனால் அயர்லாந்து அணி, விளையாடிய மூன்று போட்டிகளைச் சேர்த்தலும் கூட (144+112+133) 389 மட்டுமே வருகிறது.

நியூசிலாந்து vs அயர்லாந்து

ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து மகளிர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 490/4 அயர்லாந்து அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது.

ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து ஆடவர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 402/2, இதுவும் அயர்லாந்து அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது.

அமெலியாவின் கிரிக்கெட் பின்னணி

அமெலியாவின் தந்தை ஆர்.ஜே.கெர் ஒரு உள்ளூர் கிரிக்கெட் ஆட்டக்காரர். அவரது தாயார் ஜே.எஃப்.முர்ரே, அவரும் ஒரு உள்ளூர் கிரிக்கெட் ஆட்டக்காரர். அமெலியாவின் தாத்தா ப்ரூஸ் முர்ரே நியூசிலாந்து அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ளார்.

சச்சின், கெயில் வரிசையில் அமெலியா

ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் மற்றும் ஐந்து விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கிறிஸ் கெயில் மட்டுமே உள்ளனர். அந்தப் பட்டியலில் தற்போது அமெலியாவும் இணைந்துள்ளார். சச்சின், கெயில் இந்தச் சாதனையை வெவ்வேறு போட்டிகளில் பெற்றிருந்தனர். ஆனால் அமெலியா ஒரே போட்டியில் இரண்டு சாதனைகளையும் படைத்துள்ளார்.
Powered by Blogger.