காலா இருமுனை எதிர்ப்பை வெல்லுமா ?

ரஜினி நடித்து 2001ல் வெளிவந்த பாபாகூட பாமகவின் எதிர்ப்பை மட்டும்தான் சம்பாதித்தது. ஆனால் இப்போது ரஜினி நடித்து நாளை வரும் காலா படம் ஒரே நேரத்தில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என்ற இருகட்சிகளின் எதிர்ப்பையும்

சம்பாதித்துக்கொண்டிருக்கிறது. இதனால் ரஜினி கவலை அடைந்து படத்தின் இயக்குனர் ரஞ்சித்திடம் பேசியிருக்கிறார்.

காலா படத்தை வைத்துக் கட்டணக் கொள்ளை நடத்தக் கூடாது என்று பொதுவான குரலில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி நேற்று அறிக்கை விட்டிருந்தார். ஆனால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பாமகவினர் காலாவை கடுமையாக எதிர்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒருபக்கம் ரஜினி எதிர்ப்பை வைத்து இன்னொரு பக்கம் ரஞ்சித் எதிர்ப்பையும் அவர்கள் காலாவுக்கு எதிராகத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

“இயக்குனர் ரஞ்சித் மெட்ராஸ், அட்ட கத்தி போன்ற படங்களில் வன்னியர் சமூகத்தை இழிவாகக் காட்டுவதாகவும் தலித் சமூகத்தை உயர்த்தி காட்டுவதாகவும் சித்திரித்திருக்கிறார். காலாவிலும் இதேபோன்ற காட்சி அமைப்புகள் இருக்கலாம். எனவே ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் காலாவை நம் சமூக மக்கள் யாரும் பார்க்கக் கூடாது’’ என்று அவர்கள் தகவல் பரப்பிவருகிறார்கள்.

இன்னொரு பக்கம் தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் இருக்கிறார்கள் என்று ரஜினி சொன்னதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது விடுதலைச் சிறுத்தைகள். காலா தலித்தியம் பேசும் படம் என்றால் கூட ரஜினியின் அரசியல் பின்னணி குறித்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு பலத்த சந்தேகம் இருக்கிறது. எனவே சிறுத்தைகளும் ரஜினி எதிர்ப்பை காலா எதிர்ப்பாக மடை மாற்றி வருகின்றனர்.

இப்படி இரு தரப்பினரும் காலாவை எதிர்ப்பது ரஜினியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக தளங்களில் இந்த இரு கட்சியினரும் காலாவுக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பு பற்றி படத்தின் இயக்குனர் ரஞ்சித்திடம் கேட்டிருக்கிறார் ரஜினி.

அப்போது ரஞ்சித், “சார் பாபா படம் வெளிவரும்போது இருந்த நிலைமை வேறு. இப்ப இருக்கிற நிலைமை வேற. இரு கட்சிகளிலும் சிலர் இப்படி ஊதிப் பெரிதாக்குவதால் எதிர்ப்பு பெரிதாக கிளம்பிவிடாது. உங்க ரசிகர்கள் மாசா இருக்காங்க. காலாவை நான் சீனியர் இயக்குனர்களுக்கு போட்டுக் காமிச்சேன். படம் கமர்ஷியலா நல்லா போகும்னு சொன்னாங்க’’ என்று ரஜினிக்கு நம்பிக்கை கொடுத்தாராம்.

அதேநேரம் ரஞ்சித் தனது நண்பர்களிடம், “விடுதலைச் சிறுத்தைகளே என்னை புரிஞ்சுக்கலைன்னா எப்படி?’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

காலா படம் நாளை வெளியான பின்பே இரு கட்சியினரின் எதிர்ப்பு எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரியும்.
Powered by Blogger.