நான் ஓர் அரசியல்வாதி!!!

இயக்குநர் பா.ரஞ்சித் தான் ஓர் அரசியல்வாதிதான் எனக் கூறியுள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காலா. நடிகர் ரஜினி, தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என அறிவித்த பின்னர், இந்தப் படம் வெளியானதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்துக்களால் அவரைச் சுற்றிய சர்ச்சைகள் படத்தையும் விட்டுவைக்கவில்லை. பல தடைகளைக் கடந்து இன்று உலகம் முழுவதும் வெளியான காலா படத்தைக் காண அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கூடத் தொடங்கினர். தோரணம், பட்டாசு, கட் அவுட், பால் அபிஷேகம் எனத் திரையரங்கமே களை கட்டியது.

படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருந்தது என்பதைக் காண இன்று காலை சென்னை சத்யம் திரையரங்குக்கு வந்திருந்த இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “காலாவில் ரஜினியிசம் நன்றாக வந்திருக்கிறது. நான் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்தேன், அதே போல் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது. மேலும் நிலம் பொதுவானது. நிலமற்றவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்ப நினைக்கிறேன். சமூகத்தில் சூழல் எப்படி இருக்கிறது என்பதை, இந்தப் படத்தின் மூலம் ஒரு விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். தற்போது வரை தமிழகத்தில் இரண்டு காட்சிகள் வெளியாகியுள்ளன. கபாலிக்கு இரண்டு தரப்பான விமர்சனமும் எழுந்தது. ஆனால் காலாவுக்கு இதுவரை நேர்மறையான விமர்சனமே வந்துள்ளது” என்று கூறினார்.

மேலும் “ரஜினியின் அரசியலுக்காக இப்படம் எடுக்கப்படவில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுக்கப்பட்ட படம். மக்கள் பிரச்சினையைப் பேசுவதுதான் அரசியல் நோக்கம். மிகப் பெரிய இலக்கே மக்களின் பிரச்சினையைப் பேசுவதுதான். சமுதாயத்தில் ஒரு பாகுபாடு உள்ளது. அந்தப் பாகுபாட்டை உடைப்பதற்கு கலையைப் பயன்படுத்துவேன். என்னைச் சுற்றி நிகழ்வது அரசியல். அதனால் நான் பேசுவது அரசியல் குறித்துதான் இருக்கும்” என்ற தனது நிலைப்பாட்டை பதிவு செய்தார்.

காலா இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எடுக்கும் அனைத்துமே அட்டகத்தியின் நீட்சியே. அதன் அடுத்த பாகங்கள்தான் எனது திரைப்படங்கள். தற்போது கர்நாடகாவில் வெளியாகாதது கவலை அளிக்கிறது. இன்றே அங்கும் வெளியாவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்றார்.

காலா திரைப்படத்தை நேற்று இரவு ஃபேஸ்புக்கில் லைவாக வெளியிட்ட நபருக்கு “ஃபேஸ்புக்கில் இந்தப் படத்தை லைவ் செய்த தம்பிக்கு நன்றி” எனச் சிரித்தபடியே கூறினார். மேலும் நீங்கள் இயக்குநரா, அரசியல்வாதியா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் "நான் அரசியல்வாதிதான்” என பதிலளித்தார். மேலும், “ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்காக இணைந்து பணியாற்றுவேன், மக்களுக்கு எதிராக செயல்பட்டால் முரண்படுவேன்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.