தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கபடுவதால் என்ன செய்யமுடியும்!

தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.


இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை எட்டுவது தொடர்பில் நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்பிற்கு இதன்போது எதிர்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்கால அரசியல் நிலைமை தொடர்பிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இரா. சம்பந்தன் நோர்வே அதிகாரிகளுக்குத் தௌிவுபடுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமவுரிமை வழங்கப்படாததால், மக்கள் விரக்தியடைந்துள்ளதாக இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி விடுவிப்பு தொடர்பில் முன்னேற்றம் காணப்பட்டாலும் யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் நிலங்களில் படையினர் பயிர் செய்கை செய்து விளைச்சலை காணியின் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யும் துர்பாக்கிய நிலை காணப்படுவதாக இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடக்குக் கிழக்கிலுள்ள பல பிரதேசங்களில் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது மக்களின் இந்தப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் காத்திரமான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நோர்வே அரசாங்கம், இலங்கை தொடர்பில் இதுவரை காலமும் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசியக் கூடடமைப்பு நன்றி தெரிவித்ததாகவும் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments

Powered by Blogger.