சிறுத்தை தாக்கி பெண் உயிரிழப்பு!

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று(ஜூன் 15) சிறுத்தை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காஞ்சமலை எஸ்டேட். இங்கு, நேற்றிரவு 7 மணி அளவில் கைலாசவதி என்ற பெண், வீட்டின் அருகே துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை அவரை கடித்து காட்டிற்குள் இழுத்து சென்றது. கைலாசவதியை காணாததால் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

அப்போது, அங்கு புதர் ஒன்றில் சிறுத்தை பாதி கடித்து தின்ற நிலையில் சடலமாக கிடந்த கைலாசவதியின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கைலாசவதியின் உடலை பார்க்க நெருங்கிய உறவினர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நான்கு மணி நேரம் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிறுத்தையால் உயிரிழப்பு ஏற்படுவது முதல் முறை கிடையாது.நேற்றுமுன்தினம் (ஜூன்14) வால்பாறை சிங்கோணா எஸ்டேட்டில் சிறுத்தைதாக்கி படுகாயமடைந்த மாதவி என்ற பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுத்தைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. வனத்துறை மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டும் மக்கள், குடியிருப்புகளை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.