வீட்டு வாசலில் தொங்கிய பாவப்பட்ட பணம்!

ஒட்டுக்குழு ஈபிடிபி உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான சி.தவராசாவிற்கு வழங்க சேகரிக்கப்பட்ட பண விவகாரம் தொடர்பாக இன்று யாழ் பொலிசாரிடம் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முறையிட்டுள்ளார். இதையடுத்து சிறிலங்கா காவல்துறையிடம் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளனர்.


இன்று மாகாணசபையில் பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோதும், யாரும் பணத்தை வாங்காததையடுத்து, எதர்க்கட்சி தலைவர் தவராசாவின் கொக்குவில் வீட்டில் பணத்தை கொட்டியுள்ளனர். இதையடுத்தே யாழ் சிறிலங்கா காவல்துறையிடம் தவராசா முறையிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக தான் கொடுத்த 7,000 ரூபா பணத்தையும் திரும்ப தரும்படி எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மாகாணசபையில் கோரியிருந்தார். எனினும், இந்த கோரிக்கையை கைவிடுவதாகவும் அவையில் கூறியிருந்தார்.

இதையடுத்து கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ஒரு ரூபா வீதம் பணம் சேகரித்தனர். அதற்கு பாவப்பட்ட பணம் என்றும் பெயர் சூட்டினர்.

பாவப்பட்ட பணத்துடன் மாணவர்கள் சிலர் இன்று வடமாகாணசபைக்கு வந்தனர். பணத்தை முதலமைச்சரிடம் வழங்க எத்தனித்தபோது, இந்த விவகாரத்தை அவைத் தலைவர் ஊடாகவே கையாள வேண்டுமென முதலமைச்சர் கூறினார்.

இதையடுத்து, மாணவர்கள் அவைத்தலைவரை சந்திக்க முயன்றபோது, அவைத்தலைவர் அவர்களை சந்திக்க மறுத்து விட்டார். அத்துடன் பணத்தையும் வாங்க மறுத்துவிட்டார்.

இதன்பின்னர் வடமாகாணசபை உறுப்பினர் அயுப் அஸ்மினிடம் இது தொடர்பாக மாணவர்கள் பேசினார்கள். இந்த விவகாரத்தை சபைக்குள் பேசுவதற்கு அஸ்மின் முயன்றபோது, அவைத்தலைவர் அதற்கு அனுமதி மறுத்து விட்டார்.

இதேவேளை, இன்றைய தினம் பாவப்பட்ட பணம் தன்னிடம் வருவதை அறிந்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்பிற்கு சென்றுவிட்டார்.

இதனால் பாவப்பட்ட பணத்தை எதிர்க்கட்சி தலைவரிடம் வழங்கவோ, மாகாணசபை பிரதிநிதிகளிடம் வழங்கவோ, சபைக்குள் அது பற்றி பேசவோ முடியாத நிலையேற்பட்டது. தவராசாவிற்கு சார்பாக அவைத்தலைவர் செயற்பட்டு, பண விவகாரத்தை யாரும் பேசாத விதமாக செயற்பட்டுள்ளார்.

இதையடுத்து, மாணவர்கள் பாவப்பட்ட பணத்தை கொக்குவிலில் உ்ள தவராசாவின் இல்லத்திற்கு முன்பாக போட்டுவிட்டு சென்றனர்.

இதையடுத்து, கொழும்பிலிருந்தபடி யாழ் சிறிலங்கா காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, இது குறித்து முறையிட்டுள்ளார்.

Powered by Blogger.