நடிகைகளுக்கு எச்சரிக்கை!

தெலுங்கு, கன்னடத் திரைப்பட நடிகைகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்துச் சென்ற ஒரு கும்பலை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.


ஐதராபாத்தைச் சேர்ந்தவர் கிஷன் மொடுகுமுடி என்ற ஸ்ரீராஜ் சென்னுபதி. இவர் மனைவி சந்திரகலா பூர்ணிமா. இருவரும் அமெரிக்காவின் சிகாகோவில் வசித்துவருகின்றனர். கிஷன் அமெரிக்கா செல்லும் முன் சில தெலுங்குப் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும், துணைத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இதில் ஏற்பட்ட பழக்கத்தை வைத்துச் சில இளம் நடிகைகளை அமெரிக்காவுக்குச் சுற்றுலாவுக்காக அழைத்துச் சென்று மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்த ஸ்ரீராஜ் சென்னுபதி, சந்திரகலா பூர்ணிமா தம்பதியரை ஏப்ரல் 28ஆம் தேதி அமெரிக்கப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். அவர்களின் வீட்டில் நடத்திய சோதனையில் பல விடுதி அறைகளை வாடகைக்கு எடுத்ததற்கான சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெலுங்கு, கன்னடத் திரைப்பட நடிகைகளைக் கருத்தரங்கத்தில் பங்கேற்கலாம் என ஆசைகாட்டி அழைத்துச் சென்று அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் பாலியல் விருப்பத்துக்கு இணங்கச் செய்ததாகத் தெரிவித்தனர். அவர்களிடம் மூவாயிரம் டாலர்கள் பெற்றுக்கொண்டு நடிகைகளுக்கு ஆயிரம் டாலர்கள் மட்டும் கொடுத்துள்ளனர்.

இதன் பேரில் சிகாகோவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட திரைப்பட நடிகைகள் 5 பேரைப் புலனாய்வுத் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இந்நிலையில் தெலுங்குத் திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தன்னையும் அந்தத் தம்பதியினர் அமெரிக்காவுக்கு அழைத்ததாகக் கூறியுள்ளார்.

இது குறித்து தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் சிவாஜி ராஜாவும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “கிஷன் இதுபோன்ற வேலையைச் செய்துவருவது பற்றி எங்களுக்குச் சந்தேகம் இருந்தது. இதனால் சிலருக்கு எச்சரிக்கை விடுத்தோம். அவர்கள் நடத்தும் விழாக்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். இருந்தும் தெரியாமல் சிலர் சிக்கியுள்ளனர். இதுபற்றி வரும் 24ஆம் தேதி நடக்கும் சங்கக் கூட்டத்தில் பேச இருக்கிறோம்” என்றார்.
Powered by Blogger.