முன்னாள் போராளிகளை உதாசீனப்படுத்தக் கூடாது!

போரில் பாதிக்கப்பட்டு பல வித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறம் தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஏற்ற உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

போரில் பாதிக்கப்பட்டு பல நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறம் தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது.

அதுவும் சமய ரீதியிலான பண்பான குடும்ப வாழ்க்கையை வாழும் உங்களைப் போன்றவர்கள் முன்னைய போராளிகளை அவர்கள் இயக்கப் பெயர் கொண்டு புறந்தள்ளி வைப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் பல்வேறு விதமான துன்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் உட்பட்ட நிலையில் துன்பங்களை இதயத்தில் சுமந்தவாறு நடைப்பிணங்களாக நகர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

நாங்கள் எமது பிரச்சினைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தும் நீங்கள் அவற்றை உதாசீனம் செய்வது வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது.

எனினும் எங்கள் பிரச்சனைகளை நாட்டின் தலைவர் என்ற முறையில் உங்களுக்குக் கூறி வைப்பது எமது கடமை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.