இரானுக்கு வெற்றியைத் தாரைவார்த்த மொராக்கோ!

நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கிய உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, ரஷ்யாவின் `செயின்ட் பீட்டர்ஸ்பர்க்’ நகரில் நடந்த மூன்றாவது போட்டியில்
`குரூப் B' அணிகளான மொராக்கோ மற்றும் இரான் அணிகள் மோதிக்கொண்டன. கோல் அடித்துவிடும் முனைப்பில் இருந்த மொராக்கோ, கோல் அடிக்கத் தடுமாறிக்கொண்டிருந்த இரானிடம் எப்படியோ தோற்று, இறுதியில் இரானுக்கு மூன்று புள்ளிகளையும் தாரைவார்த்துவிட்டது. மாற்றுவீரராகக் களமிறங்கிய மொராக்கோவின் அஸிஸ் பகத்தூஸ், போட்டியின் கூடுதல் நேரத்தில் தவறுதலாக அடித்த `ஓன் கோல்’, டிராவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போட்டியை அதிர்ஷ்டவசமாக இரானின் கைகளில் பரிசளித்துவிட்டது.


ஸ்டாப்பேஜ் டைம். ஆட்டத்தின் 95-வது நிமிடம். ஆட்டம் முடிய இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே உள்ள நிலையில் கிடைத்த `ஃப்ரீ கிக்’ வாய்ப்பில், மொராக்கோவின் கோல் பாக்ஸுக்கு வெளியே, இடதுபுறத்திலிருந்து பந்தை க்ராஸ் செய்கிறார் இரானின் எஷன் ஹாஜி சஃபி. இரான் வீரரிடம் சிக்குவதற்கு முன்னர், பந்தை க்ளியர் செய்ய எண்ணிய மொராக்கோவின் பகத்தூஸ், `நியர் போஸ்ட்டுக்கு’ அருகே வந்த பந்தை நோக்கிப் பாய்ந்து `ஹெட்டிங்’ செய்ய, யாருமே எதிர்பார்க்காத வகையில் பந்து துரதிர்ஷ்டவசமாக மொராக்கோவின் வலைக்குள்ளேயே சென்று `ஓன் கோலா'கத் தஞ்சமடைந்தது. 20 வருடம் கழித்து உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற சந்தோஷத்தில் இரான் வீரர்களும், கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டாமல் போன அதிர்ச்சியில் மொராக்கோ வீரர்களும் கண்ணீர் விட்டபடியே மைதானத்தைவிட்டு வெளியேறினர்.

`குரூப் B’ன் `அண்டர்டாக்ஸான’ மொராக்கோவும் இரானும் தங்களது இந்த முதல் போட்டியில், வெற்றியை மிகவும் எதிர்நோக்கியிருந்தன. காரணம், இந்த முதல் போட்டியின் முடிவுதான் அவர்களின் அடுத்தடுத்த போட்டிகளை முடிவுசெய்யப்போகிறது. `B குரூப்பில்’ ஸ்பெயினும் போர்ச்சுக்கலும்தான் பலம்பொருந்திய அணிகளாக விளங்குகின்றன. அந்த இரு அணிகளுடன்தான் மொராக்கோவும் இரானும் தங்களது அடுத்தடுத்த போட்டிகளில் மோதவுள்ளனர். இந்நிலையில், இந்தப் போட்டியில் கிடைக்கும் வெற்றியானது, ஒருவித ஊக்கமருந்தைப் போன்றது; அடுத்தடுத்த போட்டிகளில் சாதிக்கும் சக்தியைத் தரவல்லது! அதனால்தான் இரண்டு அணிகளும் வெற்றியை எதிர்பார்த்துக் களமிறங்கின.

ஆட்டம் முழுக்க முழுக்க மொராக்கோவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 2-வது நிமிடம் தொடங்கி 90-வது நிமிடம் வரை மொராக்கோ `அட்டாக்கிங் மைண்ட்செட்’டிலேயே விளையாடியது. கிடைத்த பல வாய்ப்புகளையும் தவறவிட்ட மொராக்கோ, அந்த ஒரு `டெரிபிள் ஓன் கோலுக்கு’ முன்பு வரை, நிச்சயம்  ஒரு புள்ளியாவது கிடைக்குமென எண்ணியிருந்தது. ஆட்டம் முழுவதுமே மொராக்கோ `ஸ்கோர்’ செய்ய பலவிதமாக முயன்றுகொண்டிருந்தது. ஆனால், இரானால் மொராக்கோ `டிஃபென்ஸை’த் தாண்டி ஒன்றுமே செய்ய முடியவில்லை. இரான் வீரர்கள், தூரத்திலிருந்து கடமைக்காக ஷாட்களை முயற்சித்து நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருந்தனர். இரான் டிஃபெண்டர்களும் கோல்கீப்பர் அலிரெஸா பெய்ரன்வன்ட்டும் தங்களால் முடிந்தளவுக்கு மொராக்கோ வீரர்களைத் தடுத்து நிறுத்திக்கொண்டிருக்க, அட்டாக் செய்யவே அவர்களுக்கு நேரமில்லாமல் போனது. கிடைத்த ஒருசில `கவுன்டர்-அட்டாக்’ வாய்ப்புகளிலும் `ஃபைனல் தேர்டில்’ சொதப்பினர். மொராக்கோவின் பிடியிலிருந்து தப்பித்தால் போதும் என்பதுபோலவே விளையாடிக்கொண்டிருந்தனர் இரானிய வீரர்கள். அதனால் முதல் பாதி, கோல்கள் ஏதுமின்றி முடிந்தது.

இரண்டாம் பாதியிலும், தொடர்ந்து கோல் அடிக்கப் போராடிக்கொண்டிருந்தது மொராக்கோ அணி. பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்கூட, இரான் `கோல் பாக்ஸ்’ வரை முன்னேறுவதும் பிறகு பந்தை இழப்பதும், மீண்டும் பந்தைப் பெறுவதும் பிறகு இரான் கோல் பாக்ஸ் வரை முன்னேறுவதும் என கோல் அடிக்க மொராக்கோ முயன்றுகொண்டேதான் இருந்தது. சில முயற்சிகள் வீணாகின. இரான் கோல்கீப்பர் அலிரெஸா பெய்ரன்வன்ட், மீறிவந்த மொராக்கோவின் சில வாய்ப்புகளையும் தடுத்துவிட, ஆட்டம் `டிராவை’ நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

இரு அணிகளிலும் சில வீரர்கள் அவ்வப்போது `முரட்டு ஆட்டத்திலும்’ ஈடுபட்டனர். குறிப்பாக, இரான் வீரர்கள் மூன்று பேருக்கும், மொராக்கோ வீரர் ஒருவருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இரு அணிகளிலும் சில வீரர்கள் காயத்தால் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

`டிராவை’ நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆட்டம், ஒரே ஒரு தவறால் இரானின் கைகளில் விழுந்துவிட்டது. `ஸ்டாப்பேஜ் டைமில்’ விழுந்த அந்த ஒரே ஒரு `ஓன் கோல்’ மொராக்கோவை அதிர்ச்சியாக்கிவிட்டது. சுமாராக விளையாடிய இரானுக்கு வெற்றியைப் பரிசளித்துவிட்டது. இந்த வெற்றி, உலகக்கோப்பை வரலாற்றில் இரானின் இரண்டாவது வெற்றியாகும். முன்னதாக, 1998 உலகக்கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்த இரான், 20 ஆண்டுகள் கழித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. தனது அடுத்தடுத்த போட்டிகளில், இனி ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளைச் சந்திக்கவுள்ள இரான், அதிர்ஷ்டத்தால் மொராக்கோவை வீழ்த்தி `குரூப் B’ இன் `டாப் டீமாக’ புள்ளிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

மொராக்கோவுக்கு இது கொஞ்சம் போதாதகாலம்தான். சமீபத்தில், 2026 உலகக்கோப்பையை நடத்தும் உரிமைகோரும் போட்டியில் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ இணை நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது. போட்டியை வெல்லுமளவுக்கு முயன்றபோதும், துரதிர்ஷ்டவசமாக இப்போது இந்தப் போட்டியில் இரானிடம் தோற்றிருக்கிறது.

நிமிடத்துக்குநிமிடம் திடீரென நடக்கும் திருப்பங்களும், கணிக்கவே முடியாத எதிர்பாரா முடிவுகளும் கால்பந்து விளையாட்டில் சகஜம்தான். இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடிய மொராக்கோ தோற்றதும், சுமாராக ஆடிய இரான் வென்றிருப்பதும் அந்தவகையில்தான். மாற்றுவீரராக களமிறங்கிய அஸிஸ் பகத்தூஸ், தவறுதலாக அடித்த `ஓன் கோல்’ இரானுக்கு வெற்றியைப் பரிசளித்திருப்பதும்கூட அந்த வகையில்தான்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.