சர்க்கார் போஸ்டரில் புகைபிடிக்கும் காட்சி! விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சர்கார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரில் புகைப்பிடிப்பது போன்று காட்சி
அமைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநலவழக்கில், 2 வாரத்தில் பதிலளிக்குமாறு நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ்க்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சர்கார் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை (ஜூன் 22) முன்னிட்டு கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இந்த போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று இருந்ததால், இது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. சில அரசியல் கட்சிகளும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தன.
இதனிடையே, விஜய்யின் புகைபிடிக்கும் காட்சியை நீக்கவேண்டும் என்றும் அந்த காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு இழப்பீடாக அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்தில் 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இன்று சர்காரின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்குமாறு நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஏற்கனவே, புகைப்பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என்று பொதுச்சுகாதாரத்துறை விஜய், சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், இந்த போஸ்டரில் இடம்பெற்றிருந்த காட்சியை உடனடியாக நீக்காவிட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள் முழுவதும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது.
இதையடுத்து, சன்பிக்சர்ஸ் நிறுவனமும் ஏ.ஆர்.முருகதாஸும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விஜய் புகைப்பிடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நீக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.