தனியார் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் தனியார் மருத்துவமனைகள் அமைக்க அரசிடமிருந்து மலிவாகவும் மற்றும் சில இடங்களில் இலவசமாகவும் நிலங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கும், அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஜூலை 9) நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது, அரசிடமிருந்து மலிவு விலையில் மற்றும் இலவசமாக நிலங்களைப் பெற்று கட்டப்படும் தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். உள்நோயாளிகளுக்கு 10 சதவிகிதமும், வெளி நோயாளிகளுக்கு 25 சதவிகிதமும் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் அரசு மானியமாக வழங்கிய நிலத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்க வேண்டும். இந்த உத்தரவைத் தனியார் மருத்துவமனைகள் மீறினாலோ, ஏழைகளுக்குப் பாரபட்சமாக சிகிச்சை அளித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறா என்பதைக் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.