வெள்ள பாதிப்பு: முதல்வர் ஆய்வு!

ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் கூறினார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் நொடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் 67 சிறப்பு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பவானி காளிங்கராயன்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 19) சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக பவானியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி, பவானி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுமார் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 7,832 பேர் 67 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 1,976 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 609.69 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன” என்று குறிப்பிட்டார்.
“காவிரி, பவானி இரு ஆறுகளும் ஒன்றாக இணையும் பகுதி பவானி. மக்கள் இரு ஆற்றின் கரைகளிலும் வசிக்கிறார்கள். இங்கு வெள்ள காலங்களில் தண்ணீர் வீட்டில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்திவிடுவதால், நிரந்தரமான வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து பாதுகாப்பான இடத்தில் அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கும். பயிர் சேதம் கணக்கிடப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார். 
பவானி ஆற்றில் ஆகாயத் தாமரையினால்தான் வெள்ளப் பெருக்கு அதிகமாகிவிட்டது என்கிறார்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “வெள்ளப் பெருக்கினால்தான் கரையோரப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. ஆகாயத் தாமரையினால் அல்ல. ஆகாயத்தாமரை முழுவதும் அகற்றப்பட்டுவிட்டது” என்று கூறினார்.
காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறதே என்ற கேள்விக்கு, “காவிரியைப் பொறுத்தவரை சமவெளி பரப்பாக இருக்கிற காரணத்தால் அங்கு தடுப்பணை கட்டமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே தடுப்பணை கட்ட 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் விரைவாகப் பணிகள் தொடங்கும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.