99,000 இந்தியர்களுக்குப் பயிற்சி!

இண்டெல் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் சுமார் 99,000 இந்தியர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சிப் தயாரிப்பு நிறுவனமான இண்டெல், இந்தியாவில் முதன்முறையாக 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தனது திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது. இதற்காக டெல்லி, மும்பை, காரக்பூர், கான்பூர், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. டிசிஎஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் இதற்காக இண்டெல் நிறுவனம் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டது. இதன்படி, 2017ஆம் ஆண்டில் மொத்தம் 15,000 பேருக்குச் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கைத் தாண்டி, சுமார் 99,000 பேருக்குத் திறன் பயிற்சி வழங்கியுள்ளதாக இண்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டெல் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குநரான பிரகாஷ் மல்லையா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “முதற்கட்டமாகச் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் 15,000 மேம்பாட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த இலக்கை விட ஏழு மடங்கு கூடுதலானவர்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம். 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து சுமார் 99,000 பேருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். இண்டெல் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் செயற்கை தொழில்நுட்ப மேம்பாட்டுக் கருத்தரங்கை சென்ற வாரம் பெங்களூருவில் நடத்தியிருந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மேம்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.