ஆபாசப் பாடல்களை பஸ்களில் ஒலிபரப்புவதை தடுக்க வேண்டும்!

ஆபாச சிந்தனைகளைத் தூண்டக் கூடிய பாடல்களை பஸ்களில் ஒலிபரப்புவதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பயணிகளின் சௌகரியத்திற்காகவும், மகிழ்ச்சியான பயணத்திற்காகவும் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதும் சினிமாப் படங்களைக் காட்சிப்படுத்துவதும் வரவேற்கத்தக்கது. ஆனால் இப் பாடல்கள் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய அறிவு சார்ந்த பாடல்களாக அமைந்திருப்பதே பொதுவாக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மாறாக இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை ஒலிபரப்புவதை அனைத்து பஸ் உரிமையாளர் சங்கங்களும் ஒன்றாக இணைந்து தடுக்கலாம்.

அதே போன்று வாள்வெட்டு கலாசாரங்கள், ரவுடித்தனங்கள், சோம்பல் தன்மைகளைப் பிரதிபலிக்கும் படங்களைத் தவிர்த்து கருத்தாழம் மிக்க நகைச்சுவைகளுடன் கூடிய பல நல்ல படங்களைக் காட்சிப்படுத்துவதையே எமது மக்கள் விரும்புகின்றார்கள்.

படங்களையும் பாடல்களையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பொறுப்புள்ளவர்களிடம் விட்டால் பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் வெட்கப்படத் தேவையில்லை என்று கருதுகின்றேன். பஸ்களில் பயணம் செய்யும் பலரின் கருத்தையே இங்கு நான் பிரதிபலிக்கின்றேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.

#C. V. Vigneswaran     #srilanka   #jaffna

No comments

Powered by Blogger.