டெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் செல்வாரா?

டெல்டா மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் உடனடியாக பார்வையிட்டு மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன.
இந்த நிலையில், டெல்டா மாவட்ட மக்களுக்கு அரசு உதவவில்லை என்று குறிப்பிட்டு ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரியலூர், தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட சில கிராமங்களிலும் நாகை மாவட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே பல கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது” என்று பட்டியலிட்டுள்ளார்.
“காவிரி பாசன மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ள அவர், “இது, ஒருபுறம் இருக்க வெள்ளம் ஏற்பட்ட பிறகாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையினருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை. கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேறு ஏதேனும் இடங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறை பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், அத்தகைய பணிகளோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ மேற்கொள்ளப் படுவதாக தெரியவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 19) நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளார். ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட முதலமைச்சர் இன்று வரை செல்லவில்லை. இனியும் செல்வாரா? என்பதும் தெரியவில்லை” என்று சந்தேகம் எழுப்பியுள்ள ராமதாஸ், காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக வெளிவரவில்லை. இந்த பாதிப்புகளை அரசு மதிப்பிட்டு போதிய உதவிகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் மக்களுக்கு உதவிகளைச் செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

No comments

Powered by Blogger.