கேரளா : பல்வேறு மாநிலங்களும் நிதியுதவி!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா கடுமையான வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவ முன்வந்துள்ளன.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 5 கோடி ரூபாய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
“கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் கேரளாவுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அளித்திருந்தேன். தமிழ்நாடு மக்களிடமிருந்து இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, கேரள மாநிலத்திற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கேரள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் அளிப்பதுடன், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக, 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 15 ஆயிரம் லிட்டர் உயர் வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால், ஆடைகள், 10 ஆயிரம் போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் ஆகியவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, “நோய் தடுப்பு மாத்திரைகள், கை உறைகள் மற்றும் சுத்திகரிப்பு மருந்துகளான குளோரின் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவப் பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஆகஸ்ட் 18) தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் போன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஹரியானா சார்பில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ரூ.10 கோடியும், பிகார் சார்பில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ரூ.10 கோடியும் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ரூ. 20 கோடி வழங்கியுள்ளார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ரூ. 10 கோடியும், ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் ரூ. 5 கோடியும் அறிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி சார்பில், அமைச்சர்களும் சட்ட வல்லுநர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரளாவுக்கு நிவாரண நிதியாக வழங்கவுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக் வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் 245 தீயணைப்பு வீரர்கள் படகுகளுடன் மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ரூ.1 கோடி கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ரூ.25 கோடி நிதியுதவி வழங்கியதுடன் ரூ.2.5 கோடி மதிப்பிலான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை கேரளாவுக்கு அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே, “ஐக்கிய அரபு நாடுகளின் வெற்றிக் கதைகளுக்கு பின்னால் கேரள மக்களின் பங்கு எப்போதுமே உண்டு. கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டியது எங்கள் கடமை” என்று துபாய் மன்னரும், ஐக்கிய அரபு நாடுகளின் பிரதமருமான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும் தெரிவித்துள்ளார். தேசிய அவசரக்கால கமிட்டியை உருவாக்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.