வாடி அமைத்து மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும் எனகோரி போராட்டம் நடத்த இயலுமா?

“யாழ்.வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் கொண்டுள்ளார்கள் என காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்.”

இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் இணைந்தே வடமராட்சி கிழக்கு மீனவர்களின் உரிமைகக்கான போராட்டங்களை மழுங்கடித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் மட்டுமேயாகும். தென்னிலங்கை மீனவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என்றவாறான தோற்றப்பாட்டினை வெளிப்படுத்த அவர்கள் நினைப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

அவர்கள் தமக்கென தனியான நிகழ்ச்சி நிரலை வைத்துக்கொண்டே இவ்வாறான கருத்தக்களை கூறுகிறார்கள்.

அவர்கள் எங்கள் மீது அபாண்டமான பொய்களை கூறுவதை காட்டிலும், தென்னிலங்கையில் தமிழ் மீனவர்கள் எந்த அனுமதியும் பெறாமல் வாடி அமைத்து மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும் எனகோரி போராட்டம் நடத்த இயலுமா?

மேலும் நாங்கள் மக்கள் போராட்டங்களை மழுங்கடித்தோம் என்றால் பகிரங்க விவாதத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் அதற்கு தயாரா?

மேலும் மீனவர் பிரச்சினைகள் குறித்து பார்க்கும்போது 30 வருடங்கள் இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கரையோரப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள்.

அவர்களை இந்த அரசாங்கமும் வஞ்சித்துக் கொண்டிருக்கின்றது. வடமராட்சி கிழக்கில் பகலில் மட்டும் கடலட்டை பிடிப்பதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவில் கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த தென்னிலங்கை மீனவர்களை கைது செய்தபோது, இரவிலும் கடலட்டை பிடிக்கலாம் அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.

அதேசமயம் முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மக்களுடைய வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் இன்று நடுத்தெருவில் இருக்கின்றார்கள். இவை குறித்து அரசாங்கம் எந்தவிதமான கரிசனையும் செலுத்தவில்லை.

இந்நிலையில் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக அல்லது ஜனாதிபதிக்கு எதிராக சாத்வீக வழியில் எதிர்ப்பு போராட்டங்களை அல்லது கறுப்பு கொடி போராட்டங்களை நடத்துவதில் எந்த பிழையும் இல்லை” என கூறியுள்ளார்.

#jaffna  #preessmetting  #metting #sivagilingam

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.