காதலரை கரம்பிடிக்கும் பிரியங்கா

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும் அவரது காதலர் நிக் ஜோனஸுக்கும் இன்று (ஆகஸ்ட் 18) மும்பையில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

பிரியங்கா சோப்ராவும் பிரபல அமெரிக்க பாப் இசைப் பாடகர் நிக் ஜோனஸும், இந்த வருடத் தொடக்கத்திலிருந்து காதலித்து வருவதாகக் கிசுகிசு வெளியாகி வந்தது. இதை உறுதிசெய்யும் விதமாக, பிரியங்காவும் நிக் ஜோனஸும் பல இடங்களுக்கு ஒன்றாகச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருந்தன. பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனஸுக்கு 25 வயது.

இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில், சில நாள்கள் முன், நிக் இந்தியா வந்து பிரியங்காவின் அம்மா மது சோப்ராவையும் பிரியங்காவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களையும் சந்தித்தார். அதன் பிறகு, நிக்கின் பெற்றோர் டெனிஸ் மற்றும் கெவின் ஜோன்ஸ் நேற்று முன்தினம் இந்தியா வந்தனர்.

இன்று மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். நிகழ்வின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

'பே வாட்ச்' என்கிற ஹாலிவுட் படம் மற்றும் 'குவாண்டிகோ' என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். கடந்த வருடம் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்து இருந்தது.

No comments

Powered by Blogger.