கூடுதல் விமானங்களை இயக்கக் கோரிக்கை!

கேரளாவில் மக்கள் வசதிக்காக உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்கள் மட்டுமே இப்போது இயக்கப்பட்டு வருகிறது. தண்ணீரில் மூழ்கியுள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை இயக்கத்தை நிறுத்தியுள்ள நிலையில், மக்களின் வசதிக்காக கோயம்புத்தூர், கோழிக்கோடு, மங்களூர் மற்றும் திருவனந்தபுரம் நகரங்களுக்கு நியாயமான கட்டணத்தில் கூடுதல் விமான சேவைகளை நிறுவனங்கள் அளிக்க வேண்டுமென மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் திருவனந்தபுரத்திற்கும், கோழிக்கோட்டுக்கும் நியாயமான கட்டணத்தில் கூடுதல் விமான சேவைகளை அளிக்க வேண்டும். உள்நாட்டில் அதிகத் தொலைவுகளுக்கு ரூ.10,000-க்கு மிகாமலும், குறைந்த தொலைவுகளுக்கு ரூ.8,000 வரையிலும் விமான சேவைகளை வழங்க வேண்டும். திருவனந்தபுரம், கோழிக்கோடு, மங்களூர் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து 32 நேரடி வழித் தடங்களுக்கான விமானக் கட்டணங்களை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நேரடியாகக் கண்காணிக்கும்.’

ஆகஸ்ட் 17ஆம் தேதி இதுகுறித்து மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “தனியார் விமான நிறுவனங்கள் பணத்துக்கான விமானங்களை இயக்குவது அசிங்கமானது. இன்று மங்களூர்-பெங்களூர் விமான சேவைக்கான கட்டணம் ரூ.18,000. ஆனால் இந்த வழித் தடத்தில் தோராய விமானக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே. இது கூடுதல் விமான சேவைகளை அளிக்க வேண்டிய நேரம்” என்று விமானப் போக்குவரத்து அமைச்சரான ஜெயந்த் சின்ஹாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.