கடவுள் தேசம் சிதறுண்டு கிடக்கிறது: நிவின் பாலி!

“கடவுள் தேசத்தில் நான் பிறந்துள்ளேன் என்பதை எல்லோரும் சொல்ல கேட்டுள்ளேன். ஆனால், கடவுளின் சொந்த தேசம் தற்போது சிதறுண்டு கிடக்கிறது” என்று நடிகர் நிவின் பாலி கேரள வெள்ளம் குறித்துக் கூறியுள்ளார்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். உலகில் பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரண உதவிகள் அளித்து வருகிறார்கள். இதனிடையே, பல்வேறு பிரபலங்களும் களத்தில் இறங்கி பல்வேறு உதவிகளைத் திரட்டி வருகின்றனர். பணம் மற்றும் நிவாரணப் பொருட்களைச் சேகரிப்பதில் அவர்கள் முழுவீச்சில் செயல்படுகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்து நடிகர் நிவின் பாலி உருக்கமாகப் பேசியுள்ளார். “குழந்தை பருவத்திலேயே, ‘ஒரே நாடு ஒரே கொள்கை’ என்பதை நான் நம்பினேன், கேரளாவில் பிறந்ததை பெருமையாகக் கருதி வருகிறேன். கடவுள் தேசத்தில் நான் பிறந்துள்ளேன் என்பதை எல்லோரும் சொல்ல கேட்டுள்ளேன். ஆனால், கடவுளின் சொந்த தேசம் தற்போது சிதறுண்டு கிடக்கிறது. நாங்கள் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத அளவில் இயற்கையின் உக்கிரம் அதிகமாக உள்ளது. நிறைய பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கானோருக்கு எதிர்காலம் இருண்டுள்ளது. இந்தப் பேரழிவு சூழ்நிலையில் எங்களுக்கு உள்ள ஒரே வெளிச்சம், நாட்டிலுள்ள சக மனிதர்களின் அன்புதான்.

என் இரு கரங்களை கூப்பி உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களை உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டுவரும் அளவுக்கு மன உறுதியும், தைரியமும் எங்களிடம் உள்ளது என்பதை ஒட்டுமொத்த கேரளா சார்பில் நான் கூறுகிறேன். எங்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவதெல்லாம் நிவாரணப் பொருட்கள்தான். என்ன உதவி செய்கிறோம் என்பதல்ல, இங்கு விஷயம். அது எவ்வளவு விரைவில் வந்து சேர்கிறது என்பதுதான் முக்கியம். “ஒரு நாடு... ஒரு கோட்பாடு” என்பது வெறும் கோட்பாடு மட்டுமல்ல, யதார்த்தத்திலும் அது பிரதிபலிக்க வேண்டும். கடவுளின் தேசமான கேரளாவின் பின்னால் நாட்டு மக்கள் நிற்பார்கள் என்று என் கன்னங்கள் முழுக்க கண்ணீர் வழிய எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார் 
Powered by Blogger.