சினிமாவுக்குள் எளிதாக வரவில்லை : கார்த்தி!

“என் தந்தை எங்களை சினிமாவுக்குள் எளிதாகக் கொண்டு வந்து விட்டதாகச் சொன்னார்கள். ஆனால் அது அப்படி இல்லை” என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
ஆசிப் குரேஷி இயக்கத்தில் உதயா, பிரபு, நாசர், கோவை சரளா நடித்துள்ள திரைப்படம் உத்தரவு மகாராஜா. இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், அருண்விஜய், விவேக், மனோபாலா, பசுபதி, குட்டி பத்மினி, ரோகிணி, லிசி, சங்கீதா, இயக்குநர்கள் ஆர்கே செல்வமணி, ஆர்வி.உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கார்த்தி பேசும்போது “உதயா எப்போதுமே ஒரு படத்தை பார்த்தால் அந்த படத்தை டீட்டெய்ல்டாக விமர்சனம் செய்வார். முதல்முறையாக உதயாவின் அப்பா உதயாவை பாராட்டி இருக்கிறார். அப்பா பாராட்டினால் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம் என்று அர்த்தம். இந்த படம் பெரிய ரிஸ்க் என்பது டிரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.
இங்கு பேசியவர்கள் என் தந்தை எங்களை சினிமாவுக்குள் எளிதாக கொண்டுவந்து விட்டதாக பேசினார்கள். அப்படி இல்லை. எல்லாவற்றிற்குமே காத்திருப்பு இருக்கிறது. சிறுத்தைக்குப் பின் நிறைய படங்கள் நடித்துவிட்டேன். கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்தவர்கள் சிறுத்தைக்கு பிறகு இது நன்றாக இருக்கிறது என்கிறார்கள். நான் சினிமாவுக்குள் வந்தபோது டான்ஸ், சண்டை எதுவும் தெரியாது. உள்ளே வந்துதான் கற்றுக்கொள்ள தொடங்கினேன்” என்றார்.
மேலும் இந்த படத்தின் மூலம் நடிப்புக்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை குட்டி பத்மினி பேசும் போது, “இந்த படத்தில் உதயாவின் அம்மாவாக நடித்துள்ளேன். கிராமத்தில் இஸ்திரி வண்டி தள்ளும் பெண் வேடம். ஏசியிலேயே இருந்து பழகிவிட்ட நான், இந்த படத்திற்காக வெயிலில் நின்று வியர்வை சிந்தி நடித்தேன். இனிமேல் நல்ல படங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன்” என்றார்.
மேலும் கார்த்திக்கு அம்மாவாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அந்த வாய்ப்பை கார்த்தி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மேடையிலேயே அவரிடம் கேட்டுக் கொண்டார் குட்டி பத்மினி.

No comments

Powered by Blogger.